நெல்லை: இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார். அவருக்கு வயது 77.

திருநெல்வேலியில் பிறந்த நெல்லைக் கண்ணன் தலைசிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும். இலக்கியவாதியும் ஆவார். காமராசர், கண்ணதாசன் முதலிய 1970களில் தொடங்கி தமிழ்நாட்டு சூழலில் முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில்  சமீப காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,   உடல்நலக்குறைவு காரணமாக நெல்லைக் கண்ணன் (வயது 77)  இன்று காலமானார். நெல்லை கண்ணன் மறைவு இலக்கிய உலகத்துக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக நெல்லையில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

 திருநெல்வேலியில் 1945ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பிறந்தவர் கண்ணன்.  இவரது தந்தை ந.சு.சுப்பையா பிள்ளை, தாயார் முத்து இலக்குமி. இவருக்கு உடன்பிறந்தோர் எட்டு பேராவர். பேச்சாற்றல் ம்ற்றும் இலக்கியவாதியாக கண்ணனின் பேச்சாற்றலே, அவரை  நெல்லை கண்ணன் அழைக்க வைத்தது. கண்ணனின்  முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.

காமராஜர் மீது மதிப்புகொண்ட நெல்லை கண்ணன் பல ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்,  தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.  அக்கட்சியின் பிரசார பீரங்கியாகவும் செயல்பட்டார்.

கடந்த 2020ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான முஸ்லிம் அமைப்பு மாநாட்டில் பேசிய அவர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த சர்ச்சை கருத்தை பேசியதற்காக சிறை சென்றிருக்கிறார்.  2021ம் ஆண்டிற்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.  இவ்விழாவில், காமராசர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்குகும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசியவர்,  ‘திருமாவின் மடியில் மறைந்தால் அதுதான் எனக்கு பெருமை.அந்த பெருமை கிடைத்தால் போதும்.அதுதான் எனது பாக்கியம்.என் பொது வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு விருது கொடுத்து என்னை இதுவரை யாரும் கௌவரப்படுத்தியது இல்லை. காங்கிரஸ் கட்சிக்காக என் வாழ்க்கையை இழந்தேன், காங்கிரஸ் கட்சி எனக்கு ஒன்றுமே செய்யவில்லை  என்று கூறினார். நெல்லை கண்ணனின் பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது. பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை என்றும் அவர் பேசியதும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதும் நெல்லை கண்ணணுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். எப்போதும் சமூக வலைதளங்களிலும், குறிப்பாக முகநூலில் தொடர்ந்து பதிவுகள் எழுதிவந்த நெல்லை கண்ணன், கடந்த ஜூலை 4-ம் தேதிக்குப் பின் எந்த பதிவுகளும் எழுதவில்லை. சமீபத்தில் கூட தான் மருத்துவச் செலவுக்கு சிரமப்படுவதாகவும், வாய்ப்பிருப்பவர்கள் உதவுமாறும் தன் முகநூலில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவர் இன்று உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.