நெல்லை: நெல்லை சிஎஸ்ஐ பிரச்சினையில்,  மாவட்ட கோட்டாட்சியர் கார்த்தியாயினி  ரூ.5லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒருதலைப் பட்சமாக  தீர்ப்பு வழங்கி இருப்பதாக,  திமுக எம்.பி. தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரச்சினைக்குறிய திருச்சபை சீல் வைக்கப்படுமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தென்னிந்திய திருச்சபை என்று அழைக்கப்படும்  நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் கீழ் ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் தலைமை பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த திருச்சபையானது, நெல்லை பாளையங்கோட்டை வடக்கு ஐகிரவுண்டு ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த திருமண்டலத் தின் பேராயராக பர்னபாஸ் இருந்து வருகிறார். லே செயலாளராக ஜெயசிங் பதவி வகித்து வருகிறார். திருமண்டலத்துக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள் என 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த கல்லூரி நிறுவனங்களுக்கு தேர்தல் மூலம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இவைகள் சிறுபான்மையின மக்களுடையது என்பதால், தமிழ்நாடு அரசு தலையிட மறுத்து விடுகிறது. இதனால், இந்த அமைப்புகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. சபையில் பெரும் ஊழல் நடைபெறுவதால், அதன் தலைமை போட்டிக்கு கடும் பேரங்கள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திருமண்டலத்தின் கீழ் இயங்கும் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியின் தாளாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.  இந்த நிலையில்,  ஜூன்  30-ந்தேதி நெல்லை சிஎஸ்ஐ பிஷப் பர்னபாஸ் தலைமையில் நடைபெற்ற திருமண்டல கல்வி நிலைக்குழு கூட்டத்தில் பணி நியமனம் மற்றும் இடமாறுதல் தொடர்பாக சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தீர்மானத்துக்கு மற்றொரு அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.  அதாவது நெல்லை தொகுதி திமுக எம்.பி.யான ஞானதிரவியம் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஏற்கனவே திருச்சபையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வரும் திமுக எம்.பி. இந்த தீர்மானத்தை ஒரு காரணமாக கூறி, மோதல் போக்கில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, ஞானதிரிவியம் தரப்பினர் திருமண்டல அலுவலகத்தை  பூட்டுவதாக தகவல் பரவியதால்,  இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேராயர் திமுக எம்.பி. ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார். இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அமைதியை ஏற்படுத்தினர்.

பின்னர், ‘புதிய பணி நியமனம் தொடர்பாக முன்னாள்-இந்நாள் நிர்வாகிகள் கோர்ட்டுக்கு சென்று உரிய தீர்வை தேடிக்கொள்ள வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் இருதரப்பினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர். மேலும் அங்கு மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.   இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

 இதற்கிடையில் திமுக எம்பி ஞானதிரவியம் திருமண்டலத்தின் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். எனவே திருமண்டல நிர்வாகத்தை கண்டித்து எம்பி தரப்பினர் தொடர் மோதலில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி பிஷப் பர்னபாஸ் தரப்பைச் சேர்ந்த மதபோதகர் காட்பரே நோபல் உள்ளிட்டோர் கூட்டாக திருமண்டல அலுவலகத்திற்கு சென்ற போது, அங்கிருந்த எம்.பி ஞானதிரவியம் தரப்பினர், காட்பிரே நோபலை காலால் எட்டி உதைத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து திருமண்டல அலுவலகம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவைகளை காரணம் காட்டி மூடப்பட்டது. இந்த விவகாரம் இருதரப்பு சார்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பதனால், குற்ற விசாரணை சட்டம் பிரிவு 145 ன் கீழ் இரு தரப்பைச் சேர்ந்த தலா 16 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு விசாரணை அதிகாரியான நெல்லை கோட்ட நடுவர் நீதிமன்றத்தில் கோட்டாட்சியர் (பொ) கார்த்திகாயினி இரு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தார். அதையடுத்து இந்த புகாரில் ஆட்சியர் தீர்ப்பு வழங்கினர்.   தீர்ப்பில்  பேராயர் தரப்பினர் நெல்லை திருமண்டல அலுவலகத்தை திறக்க அனுமதி வழங்கியதுடன், பேராயரிடம் அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பேராயருக்கே திருமண்டலத்தில் முழு அதிகாரம் உள்ளது. எனவே அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

திருமண்டலத்தின் சகல குழுக்களையும், மண்டலங்களையும் தலைமை வகிக்க பேராயருக்கே உரிமை உண்டு எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. எனவே வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நெல்லை சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகம் முன் தினம் திறக்கப்பட்டது.

கோட்டாட்சியர் விசாரணையின் தீர்ப்பு பேராயருக்கு ஆதரவாக வெளியானதால், திமுக எம்.பி. ஞானதிரவியம்  தரப்பினர் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக லே செயலாளர் மற்றும் எம்.பி தரப்பைச் சேர்ந்த டயோசிசன் சொத்து நிர்வாக அதிகாரியான வழக்கறிஞர் ஜான் என்பவர் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் மற்றும் நெல்லை கோட்டாட்சியர்(பொ) கார்த்திகாயினி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை துணை இயக்குநரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், கோட்டாட்சியர்  லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறையாக எந்த ஆவணங்களையும் பார்க்காமல், எந்த புகாரையும் பரிசீலிக்காமல் ஒருதலை பச்சமாக தீர்ப்பு வழங்கி உள்ளளார்.  குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 145 தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் . கோட்டாட்சியர் விசாரித்த வழக்கில் பேராயர் தரப்பை அ பிரிவு என்றும் லே செயலாளர் தரப்பை ஆ பிரிவு எனவும் குறிப்பிட்டு, இருபிரிவிலும் தலா 16 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இதில் பேராயர் தரப்பில் உள்ள 16 பேரும் சி.எஸ்.ஐ திருமண்டலத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் லே செயலாளர் தரப்பைச் சேர்ந்த நபர்களான நாங்கள் தடை ஆணை பெற்றிருக்கிறோம். அதையும் பொருட்படுத்தாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு 5 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்து தான் பெறப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை கோட்டாட்சியர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி நில எடுப்பு பிரிவின் அதிகாரியாக உள்ளார். நதிநீர் இணைப்பு திட்டத்திற்கான நில எடுப்பு பணிகளுக்கு, விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதற்கு பத்து சதவீதம் லஞ்சம், 5% புரோக்கர் கமிஷனாக இவர் பெறுவதாகவும் குற்றச்சாட்டை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பிய புகாரில் வழக்கறிஞர் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

திமுக எம்.பி ஞான திரவியம் தூண்டுதலின் பெயரில் தான் ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் மீது புகார் அளிக்கப்பட்டதாக திருமண்டல வட்டாரம் தெரிவிக்கிறது.