சென்னை: சசிகலாவை, அதிமுக கூட்டணி கட்சியினர் சந்தித்து பேசி வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, தனது தி.நகர் இல்லத்தில், அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சசிகலா, அங்கு வந்த தொண்டர்களிடையே பேசும்போது, அனைவரும் ஒன்றிணைந்து, வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் தனது மனைவி ராதிகாவுடன் சந்தித்து பேசினார். மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திரு.V.M. முத்துக்குமார்,சமூக ஆர்வலர் திரு.டிராபிக் ராமசாமி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயப் பிரதிநிதிகள், திரைத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சந்தித்தனர்.
அதிமுக கூட்டணியில் உள்ள சரத்குமார் சசிகலாவை சந்தித்து பேசிய நிலையில், தேமுதிக தரப்பிலும் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா அதிமுகவினரை அழைக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா, “ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விழாவாக இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். வரும் சட்டமன்றத்தேர்தலில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வெற்றியைப் பெற வேண்டும் என்றார்.
தமிழ்நாடு கடனில் தள்ளாடுகிறது என்பது நேற்றைய பட்ஜெட்டில் தெரிந்தது. தமிழகம் வெற்றிநடை போடுகிறது என்பதைவிட கடனில் தள்ளாடுகிறது என்பது தான் உண்மையான வாக்கியம். அமமுக தலைமையில் அமையும் அணி என்பதுதான் முதல் அணியாக இருக்கும்.
நம்முடைய இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான். அமமுக தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து நாங்கள் சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். முடிவுக்கு வந்தபின் அறிவிக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாள்ர்களின் கேள்விக்கு எதில் கூறியவர், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் சசிகலா கூறினார். அதிமுக – அமமுக தொண்டர்களை சசிகலா சொல்லவில்லை. அதிமுகவுடன் அமமுக இணையாது. அமமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பர்” என்று விளக்கமளித்துள்ளார்.