இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. வரிவிலக்குக் கோரி ஒருவர் நீதிமன்றத்தை அணுகும்போது, இதுபோல அபராதம் விதிப்பதோடு தேவையற்ற கருத்துக்களைத் தெரிவிப்பதும் சரிதானா என நடிகர் விஜய் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மனுதாக்கல் செய்தார். நீதிபதி தெரிவித்த கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது நடிகர் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என நீதிபதி கூறியிருக்கிறார். அதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என விஜய்யின் வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார். கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது என்றும் தன்னை தேச விரோதியாக கூறுவது தவறு எனவும் வாதிட்டார்.