வானத்துக்கு கீழே உள்ள அத்தனை விவகாரங்ளையும் அலசி காயப்போட்டு மீண்டும் பிழிந்து எடுப்பவர் “நீயா நானா” கோபிநாத். கோட் காலர் படபடக்க (!) முன்னும் பின்னும் நடந்து இவர் வெளிப்படுத்தும் கருத்துக்களை கேட்கவே பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு.

அதே நேரம், இந்த, நீயா நானா நிகழ்ச்சியே ஒரு செட் அப்தான். நடிகர்களை, பொதுமக்களைப்போல நிகழ்ச்சியில் பேசவைத்து ஏமாற்றுகிறார்கள். இதில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு, ஒப்புக்கொண்டபடி பயணப்படி அளிப்பதில்லை என்றெல்லாம் புகார்கள் எழுவது உண்டு.

இப்போது அதையெல்லாம் மீறி, “பொய்யான வாக்குறுதி கொடுத்து, இளம்பெண் நிஷா என்பவரின் படிப்பையே நாசமாக்கிவிட்டார் கோபிநாத்” என்கிற புகார் கிளம்பியிருக்கிறது.

இந்த சோகத்தை அந்த பெண் நிஷாவே வாக்குமூலமாக பதிந்து யு டியூபில் உலவவிட்டுள்ளார்.  நீயா நானா நிகழ்ச்சியில் தானும் தன் வயோதக தந்தையும் கலந்துகொண்ட  ஒளிப்படங்களையும், உதவி செய்வதாக கோபிநாத் கூறிய ஆடியோவையும் அதில் பதிவிட்டுள்ளார்.

கோபிநாத் – நிஷா

அதில் நிஷா சொல்வது இதுதான்:

“என் பெயர் நிஷா.  ஐந்து ஆறு  மாதங்களுக்கு முன், நீயா நானா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அந்த நேரத்தில் என் வறுமையான சூழலை சொல்ல வேண்டியிருந்தது. உடல் நலம் முடியாத வயது முதிர்ந்த என் அப்பா, என்னை படிக்க வைக்க சிரமப்படுவதையும் கூற வேண்டியிருந்தது.

உடனே, அந்த நிகழ்ச்சியின் காம்பியரர் கோபிநாத், “படிப்புக்கு எவ்வளவு செலவு ஆகும்” என்றார். நான் “26 ஆயிரம் என்றேன்” உடனே அவர், “அந்த்த தொகையை நான் தருகிறேன்” என்று அனைவர் முன்பும் கூறினார். எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டினார்கள்.

அதன் பிறகு இது குறித்து அவருக்கு போன் செய்யும் போதெல்லாம் அவர் பி.ஏ.தான் எடுப்பார். “கோபிநாத் வெளியூர் சென்றிருக்கிறார், ஷூட்டிங்கில் இருக்கிறார்..” இப்படி ஏதாவது சொல்வார். நான்கைந்து முறை போன் செய்தும் இதே பதில்தான் வந்தது. அவராகத்தான் உதவி செய்வதாகச் சொன்னார். அதனால்தான் போன் செய்தேன். அதன் பிறகு போன் செய்ய எனக்கு விருப்பமில்லை.

இதோ.. ஐந்தாறு மாதங்கள் ஆகிவிட்டன. நானும் போன் செய்யவில்லை. அவரிடமிருந்தும் எந்தவித தகவலும் இல்லை.

இப்போது படிப்பை விட்டுவிட்டேன். கல்லூரிக்கு பீஸ் கட்டுவதற்காக கடனாக  பணம் தரும்படி ஒருவரிடம் கேட்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் கோபிநாத் உதவுவதாகச் சொன்னார். அவர் சொன்னதை நம்பி கடனாக அளிக்க இருந்தவரிடம் மறுத்துவிட்டேன்.

இப்போது இவரும் ஏமாற்றிவிட.. கடன் தருவதாய் சொன்னவருக்கும் வேறு செலவு வந்துவிட்டது. ஆக.. என் படிப்பு பாழாகிவிட்டது.

நான் கோபிநாத்திடம் சொல்வது இதுதான்.

தானாக முன்வந்து உதவி செய்வதாக சொன்னீ்ர்கள். அது பெரிய மனது. அதற்கு என் நன்றிகள். அதே நேரம், யாருக்குமே.. உங்களால் முடியாத வாக்குறுதிகளை யாருக்குமே கொடுக்காதீர்கள். அதனால் அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும். அவர்களது வேறு முயற்சிகளும் பாதிக்கப்படும்” என்று கண்கலங்க சொல்கிறார் நிஷா.

இது குறித்து கோபிநாத் தரப்பை அறிய அவரது எண்ணில் தொடர்புகொண்டோம்.  தொடர்ந்து நாட் ரீச்சபிளில் இருக்கிறது. அவரது கருத்தைக் கேட்டு வாஸ்ட்ஸ்அப் எண்ணில் தகவல் அனுப்பியிருக்கிறோம். அவரும் நமது தகவலைப் பார்த்துவிட்டார். இதுவரை பதில் இல்லை.   அவர் பதில் அளித்ததும் பிரசுரிக்கிறோம்.