டெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு டாக்டர்களுக்கு  தமிழ்நாட்டில் இந்த ஆண்டும்  50% இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி உள்ளது. 15 நாட்களில் அதற்கான இடங்களை நிரப்ப உத்தரவிட்டதுடன், வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு ஒதுக்குவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், காஞ்சிபுரத்தை சேர்ந்த என்.கார்த்திகேயன் மற்றும் பல்வேறு மருத்துவர்கள்  ரிட் மனு  தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுமீதான விசாரணை,  நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

டிசம்பர் 2ந்தேதி நேற்று நடைபெற்ற விசாரணையின்போது,  தமிழகஅரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘‘அரசு மருத்துவர்களுக்கு (இன் சர்வீஸ்) சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு செய்ய தமிழகஅரசுக்கு அதிகாரம் உள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மேற்படிப்புகளில் 50சதவீத ஒதுக்கீடு வேறு மாநில மாணவர்களுக்கு செல்கிறது.  சுமார் ரூ.400கோடி வரை தமிழகஅரசு அந்த மாணவர்களுக்கு செலவு செய்கிறது. ஒரு மாணவருக்கு ரூ.2 கோடி என பிற மாநில மாணவர்களுக்கு செலவு செய்யப்படுகிறது என தெரிவித்தனர்.

ஆனால்,  இதற்கு மத்தியஅரசு  தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கவாய், ‘‘தமிழக அரசு அவர்களுக்காக பணி புரியும் மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்னை உள்ளது? என எதிர்கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த ஆண்டும், தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இந்த ஆண்டு சேர்க்கை நடத்தலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது. ஆனால் அதனை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இன்றில் (நேற்று) இருந்து அடுத்த 15 நாட்களில் முடித்து விட வேண்டும். இதையடுத்து 16வது நாள் அன்று மீதம் எத்தனை இடங்கள் நிரம்பாமல் உள்ளது என்பது உட்பட அனைத்து விவரங்களையும் அரசு வழக்கறிஞரான அரிஸ்டாட்டில் மத்தியஅரசிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் இறுதி விசாரணையை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.