டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ந்தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இளநிலை, முதுநிலை  மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகள் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு  வருகிறது.

அதன்படி, நடப்பாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான (எம்பிபிஎஸ்)  நீட் தேர்வு ஜூலை 17ல் நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழி களில் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும்  18 லட்சத்து 72,341 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். 18 லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தது இதுவே முதன்முறை. இந்நிலையில் விண்ணப்பித்தவர்களில் 95% பேர் தேர்வை எழுதினர். தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சென்னையில் மட்டும் 31 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் தேர்வு முடிவு வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது.

தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வு முடிவு தாமதத்தால், தமிழகத்தில் ஆகஸ்ட் 25 (நேற்று) தொடங்கவிருந்த பொறியியல் கலந்தாய்வு  தள்ளிவைக்கப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ல் வெளியான பின்னர் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நீட் தேர்வை நாடு முழுவதும் 15.44 லட்சம் மாணவர்கள் எதிர்கொண்டனர். இதில் 8.70 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத தகுதி பெற்றனர்.