நெட்டிசன்:
முருகானந்தம் ராமசாமி (Muruganantham Ramasamy) அவர்களின் முகநூல் பதிவு:
அன்புள்ள திருமதி.நளினி சிதம்பரம் அவர்களுக்கு.,
இதை நான் உங்களுக்கு ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் எழுதாமலும் இருக்க முடியவில்லை. நீங்கள் காங்கிரஸ் உறுப்பினரல்ல.தொழில் முறை வழக்குரைஞர். வழக்குகளை தேர்வு செய்வதும் வழக்காடுவதும் உங்கள் தொழில்சார் உரிமை. நானும் உங்களுக்கு வேண்டப்பட்டவனுமல்ல.. எனவே நீட் எழுதிய மாணவர்களுக்கு ஆதரவாக வாதாட முற்பட்டதை என்னால் திட்டவட்டமாக குறைகூற முடியவில்லை.
ஆனால் பாருங்கள்.. அனிதா கூட எனக்கு வேண்டப்பட்ட பெண் இல்லை. அவர் தானேதான் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் என்கைகளில் கூட இரத்தக்கறை இருப்பதான பிரமையில் திரிவதற்கான மனநிலை எதுவே அதுவே இதை எழுத காரணமும் நியாயமும் ஆகிறது.
நான் ஒரு காங்கிரஸ்காரன். ஆனால் அதன்மூலம் ஒரு வார்டு மெம்பர் பதவிகூட அடைந்ததில்லை.எனது சிறிய செய்கைகூட கட்சியை பாதிக்கக்கூடாது என்கிற கவனம் இல்லாமல் ஒருகணம்கூட செயல்பட்டதில்லை. கூட்டணி தர்மத்திற்கு மாறாக கூட்டுறவு சங்கதேர்தலில் எதிர் அணியில் சேர்ந்து போட்டியிட்டார் என்பதால் எனது தந்தையுடன் சண்டையிட்டு அதில் பின்வாங்க வைத்திருக்கிறேன்.
ஆனால் உங்கள் கணவர் எனது மதிப்பிற்குரிய ஒரு தலைவர். இந்தியாவின் மாபெரும் பொது நிர்வாகிகளுள் ஒருவர்.. தமிழக காங்கிரஸின் பெருமைமிகு அடையாளம் கூட. நான் பொதுத்தளத்தில் அவர் மீதான அவதூறுகளுக்கு எதிராக ஒப்பந்தமிடப்படாத வழக்குரைஞராக செயல்பட்டிருக்கிறேன்.
இவை ஒருபக்கம் இருக்கட்டும். திரு.ப.சிதம்பரம் அவர்களும் கூட தமிழகத்தின் எளியமக்களுக்கும் உய்கல்வியை பரவலாக்கிய கல்வி வள்ளல்கள் அழகப்ப செட்டியார், அண்ணாமலை செட்டியார் ஆகிய இரு பாரம்பர்யமிக்க குடுப்பங்களின் வழித்தோன்றல்.. எனவேதான் நீங்கள் எளியமக்களின் கல்விக்கான உரிமைகளை மறுக்கும் ஒரு வழக்கில் வாதாட முற்பட்டதை ஏற்க முடியாமலாகிறது..
நீட் போன்ற ஒரு தேசிய அளவிளான நுழைவுத்தேர்வு ஏன் தமிழகத்தின் நலன்களுக்கும் அதன் சாமானிய மக்களின் உயர்கல்வி வாய்ப்பிற்கும் எதிராக இருக்கிறது என பலநூறு வாதங்கள் வைக்கப்பட்டாயிற்று.. வழக்கின் ஒரு தரப்பை சேர்ந்தவராக இவை உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும். ஆனால் நான் உங்களைப்போல வழக்கறிஞர் அல்ல என்பதால் வாதிட முடியாது . சொல்ல மட்டுமே முடியும்.
இந்திய விடுதலை இயக்கத்தின் வெற்றிக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் என்னுடைய புரிதலில் உயர்குடியினராயிருந்த அறிவுஜீவிகள் எளியமக்களின் மீது கரிசனம் கொண்டவர்களாய் காந்தியால் உருவாக்கப்பட்டார்கள். தங்கள் செல்வம் அறிவு கல்வி உழைப்பு என அத்தனையையும் எளிய மக்களின் பொருட்டு துச்சமென கருதி அர்ப்பணித்தார்கள்.
ஜவஹர்லால் நேரு அவர்கள் மீது சங்கிகள் இன்று வரை விசம் கக்குகிறார்களே ஏன்..? ஒரு உயர்குடி பிராமணணன் தரித்திரர்களை தலையில் தூக்கி வைக்கிறானே.. ஓரமாய் நின்றவர்களை வலிந்து அதிகாரத்தின் தாழ்வாரங்களில் அழைத்து வருகிறானே.. தங்களை பீடங்களிலிருந்து கீழே விரட்டுகிறானே .. என்பதுதான்..
எனவே வளமானவர்களின் அறிவு கடையரின் நலனுக்காய் சிந்திக்கும் போது அதன் குரல் அவர்களின் மீட்சிக்காய் ஒலிக்கும் போதுமே அது அறத்தின் குரலாய் மாறுகிறது. நான் உங்களின் குரல் ஒலிக்காவிடினும் உங்கள் மவுனமேனும் அதற்கு உதவட்டும் என விரும்பினேன்.
ஒரு மாநிலம் தனது மருத்துவ சூழல் குறித்து சில அளவீடுகளை முன் வைக்கிறது. அவை நேர்மையாகவும் தர்க்கப்பூர்வமாகவும் இருக்கிறது. ப்ராணவாயு இல்லாமல் 64 குழந்தைகள் மரிக்கும் நாட்டில் மிக்குறைந்த இறப்பு விகிதத்தை பராமரிக்கிறது. பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து உடையவர்களாக இருக்க கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையை அளிக்கிறது. மருந்துகளை தடுப்பூசிகளை இலவசமாக தருகிறது. இறந்த சவத்தை தோளில் சுமந்து செல்லும் நாட்டில் இலவசமாய் அவசர சிகிச்சை ஊர்திகளையும் ஏன் அமரர் ஊர்திகளையும் தருகிறது.
இந்த சூழல் ஒருநாளில் நிகழ்ந்ததல்ல. இந்தியாவிலேயே முற்போக்கான பொது சுகாதாரக்கொள்கையை வடிவமைத்தவர் காங்கிரஸ் தலைவரும் சென்னை மகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சராயிருந்தவருமான
திரு.டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்கள். அவரின் தொலைநோக்கை நான் மதிக்கிறேன்.அதனால்தான் இதை எழுதுகிறேன்.
நீட் அடிப்படையில்மாணவர்சேர்க்கையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்போது “இனி நீட் ஐ எதிர்ப்பவர்கள் கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்யவேண்டும்” என சொன்னீர்கள் என அறிந்தேன். நான் ஜனநாயகத்தை நம்புபவன்.அதில் மக்கள்தான் கடவுள் .எனவேஅவர்களிடம் பேசுவோம் என இருந்தேன்.ஆனால் சிறுமி அனிதா கடவுளை நம்புபவள் போல.நீங்கள் சொன்னதை நம்பி கடவுளிடமே நீதிகேட்க சென்றுவிட்டாள். அங்காவது என் தங்கைக்கு எதிராக வழக்காடாதீர்கள் என கேட்கவே இக்கடிதம்.மற்றபடி ஏதுமில்லை.
அன்புடன்,
இரா.முருகானந்தம்.
3.9.2017