சென்னை

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதித் சூர்யா மற்றும் அவர் தந்தை வெங்கடேஷ் இடம் நடைபெறும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன.

தேனி மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பில் சேர்ந்த உதித் சூர்யா என்னும் மாணவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தெரிய வந்தது.  அதையொட்டி உதித் சூர்யா மற்றும் அவர் தந்தை வெங்கடேஷ் ஆகியோர் தலைமறைவானார்கள்.   காவல்துறை அவர்களை திருப்பதியில் கண்டுபிடித்து கைது செய்தனர்.   தற்போது அவர்களை நீதிமன்றக் காவலில் எடுத்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததை இருவரும ஒப்புக கொண்டுள்ளனர்.  அத்துடன் மும்பையைச் சேர்ந்த தரகர் ஒருவரின் உதவியுடன் இந்த ஆள்மாறாட்டம் செய்ததை வெங்கடேஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.    தற்போது காவல்துறை ஆள்மாறாட்டம் செய்த மாணவரையும் தரகரையும் தீவிரமாகத் தேடி வருகிறது.   தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் வெங்கடேஷுடன் பணி புரிந்தவர் என்பதால் அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த விசாரணையின் போது வெங்கடேஷ் திருப்பதியில் தாம் தலைமறைவாகத் தங்கி இருந்த போது கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார்.   அத்துடன் தாம் தனது குடும்பத்தினருடன் விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையிடம் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.   இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.