சென்னை:

மிழகத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், 19 தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதி உள்ளதாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் உதித்சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமான நிலையில், இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பான வழக்கில்,  எத்தனை மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈட்டுபட்டுள் ளனர், எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதிகாரிகளின் துணை இல்லாமல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இந்த வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  மற்றும் நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமை ஆகியவற்றையும் இணைக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை புதிய தகவலை வெளியிட்டு உள்ளது. அதில், நீட் நுழைவுத் தேர்வு எழுத தமிழகத்திற்கு வெளியே உள்ள மையங்களைத் தேர்ந்தெடுத்த 19 மாணவர்களின் பெயர்களை என்.டி.ஏ வெளியிட்டு உள்ளது. இந்த விவரங்களை  சிபி-சிஐடி குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது,

‘சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவரின் மகன், உதித் சூர்யா எம்.பி.பி.எஸ் படிக்க ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, பலர் சிக்கி வருகின்றனர். இந்த புகார்களை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, எம்.பி.பி.எஸ் மாணவர்களான உதித் சூர்யா, ரகுல் டேவிஸ், பிரவீன் சரவணன், முகமது இர்பான் மற்றும் பிரியங்கா மைனாவதி ஆகியோர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி எஸ்ஆர்எம் உள்பட தனியார் மருத்துவ கல்லூரி டீன்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தேசிய தேர்வு முகமை 19 பேரின் விவரங்களை அளித்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி காவல்துறை யினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த 19 பேர் பட்டியலில் கைது செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

என்டிஏ கொடுத்துள்ள  பட்டியலில் உள்ளவர்களில் இருவர் – ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரி. மாணவர்கள் NEET க்கு விண்ணப்பிக்கும் போது அவர்களின் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட அடையாள ஆவணங்களில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும்,  புரோக்கர்களான முகமது ஷாஃபி மற்றும் வேதாசலம் பற்றிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாகவும் சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த விவகாரத்தில் புரோக்கர்களை பிடிக்க  சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறிய காவல்துறை அதிகாரிகள், தேசிய தேர்வு முகமை கொடுத்துள்ள பட்டியலில் உள்ள மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் சிபிசிஐடி காவல்துறை முன்பு ஆஜராகும்படியும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.