சென்னை:

வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமையும்  டெங்கு ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படும் என்று தமிழக சுகதாரத்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தீவிரத்தை கட்டு படுத்த நாளை முதல் டெங்கு ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. சென்னை முதல் குமரி வரை அனைத்து மாவட்டங்க ளிலும் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தினசரி டெங்கு மரணமும் நிகழ்ந்து வருகிறது.

இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், டெங்குவை கட்டுப்படுத்த தமிழகஅரசு முழு மூச்சில் கவனம்  செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை 3400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் நாளை முதல் ஒவ்வொரு வியாழக் கிழமை அன்றும் டெங்கு ஒழிப்பு நாள் அனுசரிக்கப் படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களில் கார்ப்பரேஷன் பணியாட்கள் மூலம் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கவும் வசிப்பிடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை கண்காணிப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதையொட்டி, சுகாதாரத்துறை இயக்குநகரகம் மூலம் மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அரசு கட்டிடம், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஆய்வின்போது கொசுப்புழுக்கள் உருவாவதற்கான காரணிகள் தென்பட்டால் பாராபட்சம் இன்றி அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டும், இதுபோல ஒவ்வொரு வியாழக் கிழமைகளில் கொசு ஒழிப்பு நாள் அறிவிக்கப்பட்டது. தற்போது அதே அறிவிப்பு மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.