சென்னை:

ருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து  பலர் மருத்துவ படிப்பிற்கான இடங்களை பிடித்த விவகாரம் அதிர்ச்சி அளித்த நிலையில், இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 10 பேர் குறித்த விவரங்களை தேடுவதாக சிபிசிஐடி அறிவித்து உள்ளது.

இது தொடர்பான வழக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும்,  நீதிபதிகள் வேல்முருகன், கிருபாகரன், நீட் விவகாரத்தில்  ஒரே ஒரு இடைத்தரகருக்குத்தான் தொடர்புடையது என்று கூறுவதை நம்ப முடியவில்லை என்றும், இதில் அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்று கூறியது. மேலும்,  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  மற்றும் நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமை ஆகியவற்றையும் வழக்கில் இணைந்தனர்.

இந்த நிலையில்,  கடந்த இரண்டு நாட்களுக்க முன்பு நீட் தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதியவர்களின் 10 பேர் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி. வெளியிட்டுள்ளது. இவர்களின் தகவல்கள் குறித்து தெரிவிக்கக் கோரி, டெல்லியில் உள்ள  ஆதார் தலைமை அலுவலகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. சார்பில் கடிதம் எழுதி  உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவரங்கள் கிடைக்கப்பெற்றதும் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க சிபிசிஐடி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.