சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது நீட் தேர்வு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, மறைந்த முதலமைச்சர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் வரவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் கடந்த ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப் பட்டதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி வாங்கபட்டதாகவும் கூறினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டதாக வும், அனுமதி கிடைக்கப்பட்ட மாநிலங்களில் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவுற்று விட்டது. ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு செங்கல் மட்டுமே எய்மஸ் மருத்துவமனைக்கு வைக்கப்பட்டதாகவும் அந்த செங்கலை உதயநிதி எடுத்து வந்து விட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டு தேர்வு நடத்தப்படதாது என்று திமுக கூறியிருந்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்டபோது அப்போதைய முதலமைச்சர் கலைஞர் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றதாக கூறினார். கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்த வரையில் நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை என்றும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக கூறினார்.
அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி எழுந்து பேச முயற்சித்தார். இதனால் காங்கிரஸ் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு இடையே சிறிது வாக்குவாதம் நடைபெற்றதால் அவரால் பேச முடியவில்லை.
தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி, தேர்தல் வாக்குறுதியாக திமுக நீட் தேர்வுக்கு கொடுத்தது என்ன ஆனது என ஆவேசமாக பேசினார்.
அப்போது எழுந்த காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார், அதிமுக உறுப்பினரை பார்த்து கேள்வி எழுப்பியதால், அனைத்து அதிமுக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய விஜயதாரணி, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நீட் கொண்டு வரப்பட்டாலும் விரும்புகின்ற மாநிலங்கள் மட்டுமே தேர்வை நடத்திக்கொள்ளலாம், என்று கூறியிருந்ததை குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நீட் தேர்வு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான கொள்ளை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாடு அரசு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முதலமைச்சர் கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார் . அந்த குழுவானது கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தாகவும், உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அதனை செயல்படுத்தும் பொருட்டு தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வினை புறந்தள்ளுவதற்கு புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளதாகவும்,. மருத்துவக்கல்வி செயற்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதால் ஒதுக்கப்படும் மற்றும் பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்திற்கான சமூகநீதியை பாதுகாப்பை உறுதி செய்யும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.