டில்லி,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் மீண்டும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தமிழக மக்களை ஏமாற்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறிய பொய் ஒரு மணி நேரத்திற்குள் உறுதியானது.

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு வெளியாகியுள்ள நிலையில் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், மருத்துவக்கல்விக்கான விண்ணப்பங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இது மாணவர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மத்திய அரசை வற்புறுத்தி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு வரும். அதன் காரணமாக மருத்துவக்கல்லூரிக்கான  விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும், மத்திய அரசு பதில் கிடைத்ததும் மருத்துவக்கல்வி விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசிய அடுத்த ஒரு மணி நேரத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறினார்.

இதுகுறித்து ஏற்கனவே தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி விட்டதாகவும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படியே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

மத்திய அமைச்சரின் இன்றைய பேச்சில், நீட் குறித்து  ஏற்கனவே தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது என்று உறுதிபடுத்தி உள்ளார்.

ஆனால், தமிழக அரசோ இன்னும் மத்திய அரசு பதில் சொல்லவில்லை என்று கூறி மக்களை ஏமாற்றி வருகிறது.

 

முதுகெலும்பில்லாத தமிழக அரசால், தமிழகத்தில் ஏராளமான மருத்துவக்கல்லூரிகள் இருந்தும், தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேரமுடியாத துரதிருஷ்டம் உருவாகி உள்ளது.

மத்திய பாரதிய ஜனதா அரசால் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவது இதன்மூலம் மீண்டும் உறுதியாகிறது.

நேர்மைக்கு பேர்போன தமிழக சுகாதாரத்துறை செயலாளரான ஜெ.ராதாகிருண்ணன் ஐஏஎஸ், சமீப கால மாக தற்போது, அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் பொய்யான தகவல்களை பேசி வருவது அதிகாரிகள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரிடையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற ரெய்டின்போது, ராதாகிருஷ்ணன் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.

 

[youtube-feed feed=1]