சென்னை
தமிழக சட்டசபை நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.
நாடெங்கும் தற்போது மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் குறித்துப் பல தகவல்கள் வெளியாகியும் மத்திய அரசு இந்த உத்தரவைப் பின்பற்றி வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு பயம் காணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தது. தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ளது கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. ஆளுநரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
ஆளுநர் இதுவரை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இந்த மசோதா குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியதற்கு ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது. அதில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.