டெல்லி: நீட் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதை கண்டித்து தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழகஅரசு சட்டமன்றத்தில் இயற்றிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 1ந்தேதி திருப்பி அனுப்பி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மக்களவையில் நேற்று திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதுடன், ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து, இன்று காலை மாநிலங்களவை கூடியதும், நீட் விவகாரம் குறித்தும் கவர்னரின் நடவடிக்கை குறித்தும் விவாதிக்க கோரி திமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய திருச்சி சிவா எம்.பி., கவர்னரின் அதிகாரம் தொடர்புடைய பிரச்சினை . பாஜக ஆளும் மாநிலங்களிலும் நாளை இது போன்று நடக்கலாம். ஒரு மாநில சட்டமன்றம் அனுப்ப கூடிய மசோதாவை கவர்னர் எப்படி திருப்ப அனுப்ப முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, திமுக கோரிக்கையை விவாதிக்க முடியாது. தமிழக எம்பிக்களின் கோரிக்கை குறித்து தற்போது விவாதிக்க அனுமதிக்க முடியாது. கேள்வி நேரத்தில் பேச முடியாது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மட்டுமே பேச அனுமதிக்க முடியும் என்று கூறினார்.
இதனையடுத்து திமுக எம்பிக்கள் அவையில் வெளிநடப்பு செய்தனர்.