டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது.  ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா  சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் நம்பர் 1 வீரராக மதிக்கப்படுபவர் நீரஜ் சோப்ரா. 24 வயதான இவர் ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர். இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் ஆப்ஸர் ரேங்கில் பணியாற்றி வருகிறார்.  டோக்கியோ ஒலிம்பிக்கில்  இவர்  ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் 87.58 தூரம் வீசி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இன்று நடந்த ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப்பிரிவில் கஜகஸ்தான் வீரர் டவுலெட் நியாஸ்பெகோவை 8 – 0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் பஜ்ரங் புனியா  வெண்கலப் பதக்கம் வென்றார்.  ஒலிம்பிக் போட்டிகளில் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
2008 ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் அபினவ் பிந்த்ரா; 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தங்கம் வென்றுள்ளது.
இதையடுத்து, இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா ஒரு தங்கம்,  இரண்டு வெள்ளி, நான்கு வெண்கல பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் 47-ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசு அளிக்கப்படுவதாக ஹரியானா மாநில அரசு அறிவித்ததுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றது குறித்து பேசிய நீரஜ் சோப்ரா, நம்பவே முடியாத ஒன்று நடந்ததுபோல உணர்கிறேன்; எனக்கும், நாட்டுக்கும் பெருமிதமான தருணம் இது என்று தெரிவித்தார்.