நெட்டிசன்:

அ. வெண்ணிலா அவர்களின் முகநூல் பதிவு

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. ‘அடித்தட்டு மற்றும் கிராமப்புற பின்தங்கிய மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாமல் போய்விடும்’ என்று போராடுகிறது தமிழக அரசு; போராடுகின்றன இயக்கங்கள்; போராடுகிறார்கள் கல்வியாளர்கள். ஆனால், இப்படிப் போராடிப் பெறும் உரிமை, அம்மாணவர்களுக்குப் போய்ச் சேர்கிறதா?

ராமநாதபுரம், சேதுபதி நகரைச் சேர்ந்த தே.ராஜி என்பவர், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில தகவல்களைப் பெற்றுள்ளார். அந்தத் தகவல்கள் உங்களுக்கு அதிர்ச்சி தரலாம்.

தமிழகத்தில் கடந்த 2007-2008 கல்வி ஆண்டு முதல் 2016-2017 கல்வி ஆண்டு வரை 10 ஆண்டுகளில் எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்ற அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் அந்த அட்டவணை,இந்தக் கட்டுரையில் தனியே தரப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள், வெறும் 314 பேர் மட்டுமே. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 74. எனில், தமிழகத்தில் மொத்தம் 388 பேர் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் இருந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்கள். ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாயைக் கல்விக்காகச் செலவு செய்து, விரல் விட்டு எண்ண முடிகிற ஒரு சிலரை மட்டுமே நம் அரசுப் பள்ளிகள், மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

ஏன் இந்தப் புள்ளிவிவரங்கள் 2007-ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என்பதை முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்காக மாநில அளவில் நடத்தப் பட்டுவந்த நுழைவுத் தேர்வு 2007-ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. ‘பன்னிரண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்’ என்று மாநில அரசு அறிவித்தது. ஏன் இந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது? கிராமப்புற ஏழை மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல இயலாது; மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விகளில் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாகப் போட்டிப் போட இயலாது; நகர்ப்புற மாணவர்களுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதெல்லாம்தான் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்துக்கான காரணங்களாகச் சொல்லப்பட்டன.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களும் உயர்கல்வியில் புறக்கணிக்கப் பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே தமிழக அரசு, நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. இன்று நீட் தேர்வை எதிர்ப்பதற்கு முக்கியமாகச் சொல்லப்படும் காரணம், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் தேசியப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுடன் போட்டி போட முடியாது என்பதே.

கடந்த பத்தாண்டுகளாக மாநிலப் பாடத்திட்டத்திலேயே படித்தும் அரசுப் பள்ளி மாணவர்கள் ஏன் மருத்துவப் படிப்பில் கணிசமான அளவில் சேர முடியவில்லை? யாருடன் போட்டி போட முடியாமல் தோற்றுப் போயிருக்கிறார்கள்?

தமிழகத்தில் தேசியப் பாடத்திட்டத்தின்கீழ் படிக்கும் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் மாணவர்களுடன் போட்டி போட்டுத் தோற்றுப் போனார்களா? இல்லவே இல்லை… நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு சி.பி.எஸ்.இ மாணவர்களால், நம் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் கட் ஆஃப் மதிப்பெண் அளவுக்கு மதிப்பெண் எடுக்க முடியவில்லை.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இடம் இல்லை; சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும் இடம் இல்லை. பிறகு வேறு யார்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளை ஆக்கிரமித்து இருக்கிறார்கள்?

தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே மருத்துவக் கல்லூரிகளின் இடங்களை நிரப்புகிறார்கள். தமிழகத்தின் நான்கைந்து நகரங்களில் நடத்தப்படும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே பெரும்பான்மையான அரசு மருத்துவ இடங்களைப் பிடிக்கிறார்கள். நாமக்கல்லில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மருத்துவ இடங்களைப் பிடித்திருக்கிறார்களாம்.

அரசுப் பள்ளி மாணவர்களையும், சி.பி.எஸ்.இ மாணவர்களையும்விட இவர்கள் எல்லோரும் மிகுந்த திறமைசாலிகளா? அதிபுத்திசாலிகளா? இவர்கள் மட்டும் எவ்வாறு மருத்துவப் படிப்பில் இடம் பிடிக்கிறார்கள்?

பதில் மிக எளிமையானது. இவர்கள் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கோழிகளைப் போல், மருத்துவக் கல்வியை குறிவைத்து நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பெற்றோர்களின் கனவை மூலதனமாக்கி, காசுள்ளவர்களின் முயற்சியைச் சாத்தியப்படுத்தித் தரும் இப்பள்ளிகள்தான், முறையான கல்வி என்பதையே தமிழக வரலாற்றில் கேள்விக்குறியாக்கி இருக்கின்றன. வெறும் மனப்பாடம். தண்ணீர்க் குடிப்பதுபோல், சாப்பிடுவதுபோல், பாடங்களை மாணவர்கள் பருக வேண்டும். உயிரியல் புத்தகத்தில் பத்தாம் பக்கம், நான்காவது பத்தியில் உள்ள வரியைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லும்படி பிள்ளைகளை இவர்கள் தயார் செய்கிறார்கள். பதினொன்றாம் வகுப்பைப் பேருக்கு நடத்திவிட்டு, இரண்டாண்டுகளும் ஒரே பாடத்தைப் படிக்க வைத்து, எப்படியாவது அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுப்பிவிடுகின்றன தனியார் மெட்ரிக் பள்ளிகள். இது, மாணவர்களிடையே கல்வியில் இருக்க வேண்டிய சம வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து, குறுக்கு வழியில் பெறும் வெற்றி.

இது ஒரு திட்டமிட்ட அநீதி. மாணவர்களை மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக்கும் வடிவமைப்பு (டிசைன்). இந்த வடிவமைப்புக்குள் பொருந்திப் போகும் பிள்ளைகள், 200/ 200 கட் ஆஃப் எடுத்துவிடுகிறார்கள். பாடங்களைப் புரிந்து படிக்க வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்ட சி.பி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களும் தங்கள் வாய்ப்பை இழக்கிறார்கள்.

கோடி கோடியாகப் பணம் செலவழித்து, மாணவர்களுக்கு இலவசக் கல்வி கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழக அரசின் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் தங்கள் வாய்ப்பை இழந்து போகிறார்கள்.

பணமுள்ளவர்களுக்கும், வாய்ப்புள்ளவர் களுக்கும்தான் உயர்ந்த கல்வி என்றால், சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, விளிம்புநிலை மக்களின் பிள்ளைகள் உயர்கல்வியைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாதா?

அரசுப் பள்ளிகளில் இந்தப் பிள்ளைகள்தான் இன்று படிக்கிறார்கள். ஏற்கெனவே பின்தங்கிய நிலையில் இருக்கும் சமூகம், இன்று மீண்டும் கல்வியின் பெயரால் பெரும் அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சுமாரான மதிப்பெண்கள் எடுத்து, மேற்கொண்டு என்ன படிப்பது, எதில் சேருவது என்று திகைத்து நிற்கும் இந்த மாணவர்கள், அருகே உள்ள அரசு அல்லது தனியார் கலைக் கல்லூரிகளில் அடைக்கல மாகிறார்கள்.

தனியார் கலைக் கல்லூரிகளை நடத்துவது யார் என்று பார்த்தால், மெட்ரிக் பள்ளிகள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் கல்வித் தந்தைகள்தான். பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மருத்துவ இடங்களைப் பெற்றுக் கொடுத்தவர்கள், தட்டுத்தடுமாறிப் பன்னிரண்டாம் வகுப்பை முடித்து நிற்கும் ஏழை மாணவர்களிடம் தரமற்ற கல்லூரிகள் மூலம் பணம் பறிக்கிறார்கள். இரண்டு இடங்களிலும் அவர்களுக்குக் கல்வி ஒரு வியாபாரம்.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்கும் சமூகத்தின் கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதன்மூலம், இவர்களின் முன்னேற்றத்தைத் தனியார் பள்ளிகளின் நடவடிக்கைகள் மறைமுகமாகத் தடுத்துக்
கொண்டிருக்கின்றன.

பொருளாதாரத்தில் மேம்பட ஏழை மக்களின் கைகளில் இருக்கும் ஒரே ஆயுதமான கல்வி, முழுக்க முழுக்க வியாபாரிகளின் கைவசமாகிக் கொண்டிருக்கிறது. கல்வியையும் சமூக நீதியையும் கவனமாகக் கையாள வேண்டிய தருணம் இது.