பெங்களூர்,
பெங்களூர் அருகே சிலிண்டர் ஏற்றப்பட்ட லாரி வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இரண்டு லாரிகளும் 900 சிலிண்டர்களும் எரிந்து நாசமாகின.
கர்நாடக மாநிலம் பெங்களூரில்  அருகே  உள்ள சிக்பல்லாப்புரா மாவட்டத்தில் சிந்தாமணி என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் எரிவாயு சிலிண்டர் ஏற்றப்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவு நேரத்தில்  எதிர்பாராதவிதமாக ஒரு லாரியின் பேட்டரியில் மின் கசிவு காரணமாக தீப்பொறி ஏற்பட்டுள்ளது. அந்த தீப்பொறியானது லாரியில் இருந்த சிலிண்டர் மேல் பேட்டு தீ பிடிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக லாரியில் இருந்த சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதற ஆரம்பித்தன.
சிதறல்கள் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு லாரிமீதும் விழுந்தது. அதனால் அந்த லாரியில் இருந்த  சிலிண்டர்களும் வெடிக்க ஆரம்பித்தன.
இதன் காரணமாக அந்த பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது. எரிவாயு தீ பிடித்து எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் தீ மளமளவென எரிந்தது. சிலிண்டர்கள் பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. அத்துடன் லாரியின் பாகங்களும் உடைந்து நாலாபுறமும் சிதறின.
இதன் காரணமாக அந்த பகுதிக்குள் யாரும் போகாதவாறு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்த பயங்கர விபத்தில் இரண்டு லாரிகளும் எரிந்து சாம்பலாகின.இந்த இரண்டு லாரிகளும் 900க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஏற்றப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த வேனும் எரிந்து நாசமானது.
 
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து, மேலும் அருகிலுள்ள இடங்களுக்கு தீ பரவாதவாறு தடுத்து நிறுத்தினர். இந்த விபத்து தொடர்பாக  போலீசார்  விசாரித்து வருகின்றனர்.