டில்லி

பிரான்சில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாத தாக்குதலுக்கு நசிருதீன் ஷா, ஷபனா ஆஸ்மி, ஜாவேத் அக்தர் உள்ளிட்ட 130 இந்திய ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 29 ஆம் தேதி அன்று பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் கத்தியுடன் நுழைந்த இஸ்லாமியத் தீவிரவாதி அங்கு இருந்தவர்களைக் கத்தியால் குத்தி உள்ளான்.   தனது கண்ணில் தென்பட்டோர் அனைவரையும்  கத்தியால் கொடூரமாகத் தாக்கி உள்ளான்.

இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக வந்து தாக்கிய நபரைக் கைது செய்துள்ளனர்.   அப்போது அவன் அல்லாஹூ  அக்பர் எனக் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது.   இந்த தாக்குதலில் மூவர் பலி உயிர் இழந்தனர்.  இந்த சம்பவம் உலகெங்கும் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

இந்த நிகழ்வுக்கு இந்தியாவைச் சேர்ந்த 130 ஆர்வலர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  இந்த அறிக்கையில் சமுதாயத்தின் பல தரப்பை மற்றும் குறிப்பாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பிரபலங்களும் கையெழுத்து இட்டுள்ளனர்.  இதில் நடிகர்கள் நசிருதீன் ஷா, ஷபனா ஆஸ்மி, ஸ்வரா பாஸ்கர், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், எழுத்தாளர் துஷார் காந்தி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் அடங்குவர்.