ஜப பலன் லட்சம் மடங்கு!: வேதா கோபாலன்

Must read

(முன் குறிப்பு- இரண்டு நாட்களாகப் படித்துக் கொண்டு வந்ததில் நீங்கள் சில அபூர்வக் குறிப்புக்களைப் பார்த்திருப்பீர்கள், அதாவது அன்றைக்கு நம் வீட்டுக்கு வரும் தேவி பற்றிய விவரங்களும் பிரசாதம் மற்றும் கலசத்துக்குள் உள்ள தேவியின் பெயர்.,. கோலம் போன்றவை. இவை எனக்கு எங்கிருந்து கிடைத்தன என்று வியப்பு ஏற்படக்கூடும், மகாபெரியவர் சொல்லிய சூக்கும ரகசியங்கள் சிலவற்றையும் தேவி மாகாத்மியம் போன்ற நூல்களிலிருந்தும் எடுத்த விவரங்கள் இவை.)
நேற்று நிறுத்திய இடத்தில் தொடர்வோமா? குழந்தைகள் என்றாலே கேள்விகள் கேட்பார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். பொம்மைகளைப் பார்த்தவுடனேயே குழந்தைகள் அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்பார்கள். ”சிவன் ஏன் தலையில் நிலா  வெச்சிருக்கார்.. அம்பாள் ஏன் லயன் மேல உட்கார்ந்திருக்காங்க” என்பது போன்ற கேள்விகள். இதன் மூலம் அவர்கள் நம் இதிகாசங்களையும் புராணங்களையும் சுவாரஸ்யமான முறையில் அறிவதற்கு இது ஒரு வாயப்பு ஏற்படுகிறது. ஒரு வேளை நமக்கே தெரியவில்லை என்றால் விவரங்களைப் படித்தோ பெரியவர்களிடம் கேட்டோ  நாம் சொல்வோம். இதன் மூலம் நாமே கற்கக்கூட வாய்ப்புக் கிடைக்குமல்லவா?
1
புராணக்கதைகளும் இதிகாசக்கதைகளும் வெறும் கதைகள் அல்ல. அவற்றிற்குள் புதைந்து கிடைக்கும் ஏராளமான நன்மைகள் நமக்கும் நம் குழந்தைளுக்கும் ஒழுக்கத்தையும் நேர்மையையும் சத்தியத்தையும் பக்தியையும் ஆன்மிகத்தையும் இறை நம்பிக்கையையும் போதிக்கின்றன. நேரடியாகப் “பொய் சொல்லாதே” என்று போதிக்கப்படும் குழந்தைகளைவிட அரிச்சந்திரன் எந்த நிலையிலும் சத்தியத்தைக் காத்தான் என்றும் காந்திஜி யார் சொன்னபோதும் பொய் சொல்லவில்லை  என்றும் ‘கதை சொல்லி’ வளர்க்கப்பட்ட குழந்தைகள் நிச்சயம் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள் அல்லவா? சர்க்கரை தடடிவி மருந்து கொடுப்பது போல்…
கொலு வைக்கையில் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்று ஒற்றைப்படையில்தான் வைக்க வேண்டும். படிகளின் மீது துணி விரிக்க வேணடும் என்பதெல்லாம் குழந்தைக்குக்கூடத் தெரியும்.
அது ஏன் படிகள் வைக்கிறோம்? வாழ்வில் நாம் எத்தனை கீழ் நிலையில் இருந்தாலும்  படிப்படியாக அந்த அம்பாள் நம்மை மேலே  கொண்டுவருவாள் என்பதற்காகவே இப்படிச் செய்கிறோம். ஆன்மிகப் படிகளில் மேலும் மேலும் உயர்ந்து அம்பாளை அடைய வேண்டும் என்ற ஐதீகத்தில்தான் மேல் படியில் உயர் நிலையில் அம்பாளை ஆவாகனம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள் பெரியவர்கள்.
கலசத்தையும் விநாயகரையும் வைத்துவிட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும். இந்தக் கலசத்தை அலட்சியமாக நினைக்க வேண்டாம். கலசம் என்பது அழகுக்காக வைக்கப்படும் அலங்காரப்பொருளோ மற்றொரு பொம்மையோ அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள் தோழி. அதன் புனிதம் அளப்பரியது. கலசம் வைத்துவிட்டாலே அதற்கான புனிதத்தன்மை தன்னிச்சையாக வந்துவிடும். அதற்குள் தேவி வந்து ஆவாகனமாகிவிடுவாள்.
ஆகவே மிகவும் சுத்தமும் சுகாதாரமும் இருந்தாக வேண்டும்,
தயவு செய்து பிளாஸ்டிக் பொம்மையாக வரும் கலசத்தை வைக்கவே வேண்டாம், அது எத்தனை அழகாக இருந்தாலும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கானது என்பது நமக்கு நன்றாகப் பல ஆண்டுகளாகத் தெரிந்த விஷயம். எனவே மூன்றாம் நாளான இன்று துர்க்கையின் சுலோகங்களையும் லலிதா சஹஸ்ரநாமமும் சொல்வது நல்ல பலன் தரும்.
நான் ஒரு வீட்டில் கொலுவுக்குப் போயிருந்தேன். சாத்திர முறைப்படி அமைந்த கொலு.. அவர்கள் வீட்டில்  என்ன நடந்தது?  அந்த சுவாரஸ்ய விவரத்தை நாளைக்குச்  சொல்கிறேன். இப்ப, வந்த வேலையை கவனிப்போமா?
மூன்றாம் நாளான இன்று நம் கொலுவுக்காக வரவிருப்பவள் பெயர் மாஹேஸ்வரி. இவள் ரிஷப வாகனத்தில் வருகைபுரிவாள்.
இன்றைக்கு அவள் 15 வயதுக்குமரியாக வருகைபுரிவாள். ஆகவே இன்றைக்கு இந்த வயதில் வருபவர்களை லேசாக எடைபோடுவிடாதீர்கள். அது அவள்தான் (ரிஷபம் எங்கே  என்று குதர்க்கவாதம் புரிபவர்களுக்கான பதிவில்லை இது)
இன்றைக்கு வரக்கூடிய அம்பாள் அரசு செயல்பாடுகளை உயர்த்துவாள். கலசத்துக்குள் குடியேறப்போகிறவளின் பெயர் கல்யாணி. நல்முத்தைக் கொண்டு கோலம் போடுங்கள். தீப வடிவக் கோலம் போட வேண்டும். இன்றைக்குக் காம்போதி ராகம்  இசைக்கும் வீடுகளுக்கு ஓடி வந்துவிடுவாள் அம்பாள். இன்றைக்குச் செய்ய வேண்டிய நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல்.
சாம்ராஜ்யதாயினி. அதாவது அரசுக்கு நன்மையும் அரசு நன்மைகளை நமக்கும் அளிப்பவள்.
இவள் கிரீடம், வஜ்ராயுதம் ஆகியவற்றைத் தாங்கி வருவாள். இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.
2
இந்தத் தாய் பச்சை மற்றும்   பொன்வண்ண நிறத்தில் ஆடை அணிந்து வருவாள். (இந்த ஆடையில் உங்கள் வீட்டுக்கு வரும் சுமங்கலி அவளாகவும் இருகக்கூடும் என்பதை நினைவில் கொள்க)
இவளுக்கு நாம் சுலோகங்கள் சொல்லிப் பூஜை செய்கையில் நாம் மஞ்சள் நிற வஸ்த்திரம் அணிந்து பூஜிக்க வேண்டும்.
மீனாட்சியாகவும் இவள் நம்மை வந்தடைவாள்.
இன்றைக்கு “யாதேவி சர்வபூதேஷு மயூரவாஹினி சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ என்று பல முறை சொல்வது நலம் தரும்.இந்த நவராத்தரி காலத்தில் சொல்லப்படும் ஜபங்கள் லட்சம் மடங்கு பலன் தரும் என்பது உறுதி
அனைவருக்கும் அவள் அருள் கிட்டட்டும். நாளை சந்திப்போமா?

More articles

Latest article