மதுரை,

மிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தொடங்கலாம் என  சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது,  நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டால் தமிழ் கற்பிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. அதைத்தொடர்ந்து இன்று தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.‘

தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா பள்ளிகள் என்னும் மத்திய அரசின் பள்ளிகளை துவக்க எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இருந்தபோது, 1995ம் ஆண்டு  நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.  ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவின்போது, இந்தப் பள்ளிகள்  ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆனால், தமிழகத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க, நவோதயா பள்ளிகள்மூலம் இந்தி திணிக்கப்படும் எனக் கூறி, இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் காரணமாக தமிழகத்தில்  நவோதயா பள்ளிகள் திறக்கப்படாது என மத்திய அரசு அறிவித்தது.

தமிழகம் முழுவதும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்  கொண்டுவர வேண்டும் என குமரி மகா சபா அமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது,  தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட்டு வரும்போது, அரசு எதிர்ப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மேலும்,  தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது தமிழக அரசு சார்பாக வாதிடும்போது, நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட மாட்டாது என்றும், தமிழக அரசின் மாநில கொள்கையில் இரு மொழி பாடத்திட்டங்கள் இருப்பதால் நவோதயா பள்ளிகள் கொண்டு வந்தால் மாநில அரசின் கொள்கை பாதிக்கும் என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படும் என்று உறுதி அளித்தது.

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.