1988 ம் ஆண்டு சாலையின் குறுக்கே காரை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து-வால் தாக்கப்பட்ட குர்நாம் சிங் என்பவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக சித்து மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் இருந்து பாட்டியாலா செஷன்ஸ் நீதிமன்றம் 1999 ம் ஆண்டு அவரை விடுவித்தது.

இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில் சித்துவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

33 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே 20 ம் தேதி பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் நன்னடத்தை காரணமாக 317 நாட்கள் கழித்து இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பாட்டியாலா சிறையில் இருந்து வெளியில் வந்த அவரை ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக வந்திருந்து வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய
சித்து “நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கியவுடன் அதனை எதிர்த்து இந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்கும் பஞ்சாப் மாநிலத்தில் குரல் எழுந்தது”

“தொடர்ந்து ராகுல் காந்தியின் தலைமையில் புரட்சி ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் அரணாக நான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சித்து சிறையில் இருந்து வெளியில் வந்ததும் அளித்துள்ள இந்த பேட்டி பாஜக-வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.