விழுப்புரம் அருகில் செந்தில் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றி தனக்கு தீ வைத்துக்கொண்டதோடு, தன்னை காதலிக்க மறுத்த நவீனா என்ற மாணவியை இறுக்கிப்பிடித்துக்கொண்டார். இதில் செந்தில் இறந்தார். நவீனா, மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் நேற்று இரவு மரணமடைந்தார்.
கடந்தவருடம், இதே செந்தில், தங்களது காதல் பிடிக்காமல் காதலியின் பெற்றோர் தனது கை, காலை வெட்டிவிட்டதாக காவல்துறையில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செந்திலை வைத்து விவாதம் ஒன்று நடந்தது. இந்நிகழ்ச்சியை குணசேகரன் நெறிப்படுத்தினார்.
பிறகு, செந்தில் சொன்னது பொய் என்பதும் விபத்தினாலேயே கை, காலை இழந்தார் என்றும் தெரியவந்தது.
இந்த நிலையில் தானும் தீக்குளித்து, மாணவி நவீனாவையும் கொளுத்தினார் செந்தில். இந்த சூழலில் தொலைக்காட்சி நெறியாளுனர் குணசேகரன் மீது சமூக வலைதளங்களில் சிலர் கடுமையான விமர்சனங்ளை வைத்தனர்.
இந்த நிலையில், நேற்று நவீனா மரணடைந்ததை அடுத்து, “நவீனாவின் மரணம் துயரம் அளிக்கிறது. தவறான நபரான செந்திலுக்காக விவாத அமர்வில் பரிந்து பேசியமைக்காக வருந்துகிறேன்” என்று தனது முகநூல் பதிவில் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவு:
“விழுப்புரம் செந்திலின் மூர்க்கத்தனத்தால் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பாவிப் பெண் நவீனா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைகிறேன். எந்தத் தவறும் செய்யாத அந்தச் சிறுமியின் பரிதாபகரமான மரணம் நெஞ்சை ரணமாக்குகிறது. அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்.
ஓராண்டுக்கு முன் விழுப்புரம் செந்தில், தான் வெட்டப்பட்டதாக போலீசில் அளித்த புகாரை உண்மையென நம்பி புதிய தலைமுறையில் விவாதிக்க நேர்ந்தமைக்காக வருந்துகிறேன். காலை நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையிலான அவ் விவாதத்தை, நான் நெறியாள நேர்ந்ததே ஒரு விபத்து. எனினும் அதுபற்றி இப்போது விவரிப்பது பொருத்தமாக இராது. தவறான நபர் ஒருவருக்காக, விவாத அமர்வில் பரிந்து பேசியமைக்காக வருந்துகிறேன். இன்றளவும் வேதனைப்படுகிறேன்.
சகோதரி நவீனாவுக்கு மீண்டும் எனது இதய அஞ்சலி.!” – இவ்வாறு குணசேகரன் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel