புவனேஸ்வர்

ரிசாவில் ராணுவ தொழிர்சாலையும் விமான பல்கலைக்கழகத்தையும் அமைக்க வேண்டும் என பிரதமருக்கு ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராணுவ தளவாடங்கள் தற்போது முழுக்க முழுக்க நாட்டின் உள்ளேயே உற்பத்தி செய்வ்தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மேக் இன் இந்தியா என்னும் திட்டத்தின் கீழ் அனைத்து ஏவுகணைகள் உட்பட பல ராணுவப் பொருட்களையும் இந்தியாவில் தயாரிக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.    அந்த தளவாட தொழிற்சாலைகள் அமைக்க ஒவ்வொரு மாநிலமும் போட்டி இட்டு வருகின்றன.

ஒரிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்  சமீபத்தில் பிரதமருக்கு இது குறித்து கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.  அதில், “தற்போது ராணுவ தளவாடங்கள் அமைக்க நாட்டின் உள்ளேயே தொழிற்சாலைகள் அமைக்க உள்ளதாக அறிந்தோம்.   அவ்வகையில் ராணுவ தொழிற்சாலைகளை ஒரிசா மாநிலத்தில் அமைக்க வேண்டும்.  இதற்கான அத்தியாவசிய தேவைப் பொருட்களான எஃகு. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், அலுமினிஉம் போன்றவை ஒரிசாவில் அதிக அளவில் கிடைக்கிறது.

டாடா இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை,   தேசியல் அலுமினிய நிறுவனம் ஆகியவை ஒரிசாவில் அமைந்துளன.  அத்துடன் சோதனை மற்றும் உற்பத்திக்கான அனைத்து உட்கட்டமைப்புகளும் ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளன.   பாலசோர் மற்றும் போலங்கிரில் ஏற்கனவே  ராணுவ சோதனை மையங்கள் அமைந்துள்ளதை பிரதமர் நினைவில் கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைக்கு தேவையான காலி நிலங்கள், மற்றும் நீர்வளங்கள் ஒரிசா மாநிலத்தில் தாராளமாக உள்ளன.   அத்துடன் நாட்டிலேயே அதிகம் திறனுள்ள ஊழியர்கள் இங்கு மற்ற மாநிலங்களை விட குறைவான ஊதியத்தில் கிடைப்பார்கள்.   இவை அனைத்தையும் மனதில் கொண்டு இனி ராணுவ தொழிற்சாலைகளை ஒரிசாவில் நிறுவ வேண்டும்.

அத்துடன் இந்துஸ்தான் ஏராநாட்டிகல்ஸ் நிறுவனம் தொடங்க உள்ள விமான பல்கலைக் கழகத்தையும் ஒரிசாவில் தொடங்க வேண்டும்.   இந்த பல்கலைக்கழகத்துக்கு தேவையான நிலம் உட்பட பல வசதிகளையும் ஒரிசா அரசு அளிக்க காத்துக் கொண்டிருக்கிறது.   மற்ற மாநிலங்களை விட மிகக் குறைந்த செலவில் இங்கு அத்தைகைய பல்கலைக் கழகம் அமைக்க முடியும்” என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.