சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு, அதன் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.


திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்திருக்கிறது. அந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார்.
இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. திமுக, பாமக மத்தியில் காரசாரமான அறிக்கைகள் வெளியாகின. மேலும், இதுதொடர்பாக, தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டது.


இந் நிலையில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்பது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, தமிழக முதன்மை செயலாளர் மற்றும் முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


அதில் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் வரும் 19ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும், அப்போது, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.