நியூயார்க்:

மெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது,  ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு குழுவை சந்தித்தவர், தனது சொந்த நிதியில் இருந்து ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வுக்காக 10ஆயிரம் டாலர்கள் தருவதாக உறுதி அளித்துள்ளார்.

தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்  10 நாட்கள் அரசு முறைப்பயணமாக கடந்த 8ந்தேதி  அமெரிக்கா சென்றுள்ளார்.  அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்,  உலக வங்கியின் தலைமை அலுவலத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், வாஷிங்டனில் இந்திய- அமெரிக்க சிறு குறு  நடுத்தர தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது,  தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் பெறுவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வின் போது, தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், இந்திய – அமெரிக்க சிறு குறு நடுத்தர தொழில் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர்,  இந்திய தூதரக அலுவலகத்தில், ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கைக்கான இயக்குநர்கள் குழுவை சந்தித்து பேசினார். அப்போது, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க இந்திய ரூபாய் மதிப்பில் 7 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை சொந்த நிதியில் இருந்து வழங்குவதாக தெரிவித்தார்.

அதன்பின்னர், அமெரிக்க வாழ் இந்திய முதலீட்டாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.