சென்னை: தேசிய பத்திரிக்கையாளர் தினத்தையொட்டி  தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிக்கப்படுகிறது, இது இந்திய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, சட்டப்பூர்வ மற்றும் அரை நீதித்துறை ஸ்தாபனத்தை நிறுவியதன் நினைவாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள்.  பத்திரிகையாளர்களின் கடின உழைப்பு மற்றும் மிகுந்த அர்ப்பணிப்புடன் அவர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு தேசிய பத்திரிக்கையாளர் தினவாழ்த்துகள்! சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு’ என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். குரலற்றவர்கள் குரலாய், சமூக முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றி வரும் பத்திரிக்கை யாளர்களின் பங்களிப்பை, தேசிய பத்திரிகை தினத்தில் நினைவு கூர்ந்து, உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்  தனது  டிவிட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குபவை பத்திரிகைகளும், ஊடகங்களும். “மனத்தூய்மையுடன் இருப்பதே உண்மையான அறம்” என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, பொதுமக்களின் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக, அற வழியில் தைரியத்துடனும், நேர்மையுடனும் செய்திகளை சேகரித்து வெளியிடுவதோடு, ஜனநாயகம் தழைத்தோங்க உறுதுணையாக இருக்கும் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் எனது தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஜனநாயகம் ஆரோக்கியமாக இருப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தினத்தில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற துறையில் இருப்பவர்களைப் போலவே ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாத்திடுவது அவசியமாகும். அதற்கு வழிகாட்டும் வகையில் தேசிய பத்திரிகையாளர் தினம் அமையட்டும். ” என்று பதிவிட்டுள்ளார்.