சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் தேசிய அளவில் இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மத்திய அரசின் கலாச்சாரத்துறை தலையீட்டால் சாகித்திய அகாடமி விருது விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், கலை இலக்கியங்களில் அரசியல் தலையீடு ஆபத்தானது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய பன்னாட்டு புத்தகத் திருவிழா 18ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
”தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீடுகள் தோறும் அறிவு தீ பரவ வேண்டும் என்பதற்காகத்தான் புத்தக திருவிழாக்களை நடத்துகிறோம். குறிப்பாக சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நந்தனத்தில் புத்தக காட்சி நடக்கும் போது இந்த சர்வதேச புத்தக காட்சி எதற்கு? என கேட்பார்கள். அவர்களுக்கு எல்லாம் சொல்கிறேன். இந்த சர்வதேச புத்தக காட்சி மொழி பெயர்ப்பு, பரிமாற்றம் என பல நாடுகளுக்கு இங்குள்ள புத்தங்களை கொண்டு போய் சேர்ப்பது முக்கியத்துவமாக உள்ளது. அதனால் இந்த புத்தக காட்சி நடந்தப்படுகிறது.
உலக நாடுகளில் நடப்பது போல பன்னாட்டு புத்தக காட்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், அது நிறைவேறி உள்ளது. நமது சிந்தனைகள், எழுத்துகள் பல நாடுகளுக்கும் சென்று சேர வேண்டும் என ஆசைப்படுகிறேன். உலகின் உயரிய சிந்தனைகள் நம் மக்களுக்கும் வந்து சேர வேண்டும், அதற்காக இந்த சர்வதேச புத்தக காட்சி நடத்தப்படுகிறது. அறிவு சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி இருக்கக்கூடிய அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.
உலக பிரநிதிகளுக்கு நான் ஒரு செய்தி சொல்கிறேன்; தமிழ்நாடு முதலீட்டுக்கு மட்டும் சிறந்ததல்ல, அறிவை பகிர்ந்து கொள்வதிலும் சிறந்த மாநிலமாக உள்ளது. மொழி என்பது பிரிக்கக்கூடியது அல்ல, உலக மக்களை இணைக்கக்கூடிய பாலமாக இருக்கும். மாணவர்களே, இளைஞர்களே புத்தகத்தை படிப்பதால் நீங்கள் உலக ஜன்னலை திறக்கிறீர்கள். நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு பக்கமும், உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். வளமான சமூகத்தை படைப்போம், தமிழ் மொழியை உலகத்திற்கு கொண்டு போய் சேர்ப்போம்.
மத்திய அரசின் கலாச்சாரத்துறை தலையீட்டால் சாகித்திய அகாடமி விருது அறிவிக்கக்கூடிய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி நடக்குமா? என தெரியவில்லை. கலை இலக்கிய விருதில் அரசியல் குறுக்கீடு ஆபத்தானது. தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமாக இதனை எதிர்க்கிறது.
உலக நாடுகளின் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வாருங்கள்; அதேபோல, மனிதநேயத்தையும், சமூகநீதியையும் பேசுகின்ற எங்கள் திராவிடக் கருத்தியல் இலக்கியங்களையும் உங்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்; எழுத்தாளர்கள் உலகை வெல்வதை பெருமிதத்தோடு எதிர்நோக்கி அனைவரும் காத்திருப்போம்.
மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் இல்லை, அது உலக மக்களை இணைக்கும் பாலம். புத்தகங்கள் வெறும் பேப்பர் கிடையாது! அவை ஒரு தலைமுறை, மற்றொரு தலைமுறைக்கு விட்டுச் செல்லும் அறிவுச் சொத்து.
எனது அன்பிற்குரிய மாணவர்களே, இளைஞர்களே! ஒரு புத்தகத்தைத் திறப்பவர், உலகத்தின் ஜன்னலைத் திறக்கிறார். ஒரு புத்தகத்தை வாசிப்பவர், ஆயிரம் மனிதர்களின் வாழ்க்கையை வாழ்கிறார். நீங்கள் வாசிக்கின்ற ஒவ்வொரு பக்கமும் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அறிவார்ந்த சமூகத்தைப் படைப்போம்! ‘உலகை தமிழுக்கும், தமிழை உலகுக்கும் கொண்டு சேர்ப்போம்’ என்று சொல்வோம்.
என்னுடைய உரையை நிறைவு செய்வதற்கு முன்பு, சில நாட்களுக்கு முன்பு, மனதுக்கு நெருடலாக ஒரு செய்தி தலைநகர் டெல்லியில் இருந்து வந்தது. உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறை தலையீட்டால், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனி, அது நடக்குமா? என்றும் தெரியவில்லை.
கலை இலக்கிய விருதுகளில் கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது. இப்படி ஒரு சூழலில், தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான, உரிய எதிர்வினையை ஆற்றவேண்டும் என்று, பல்வேறு எழுத்தாளர்களும், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோரும் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இது, காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே இருக்கிறோம்.

அதன்படி, உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற ஒரு அறிவிப்பை இந்த மேடையில் வெளியிட விரும்புகிறேன்.
“குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்”. இதனை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் “செம்மொழி இலக்கிய விருது” என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும். விருதுடன், தலா 5 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். புரவலர் பணியை தமிழ்நாடு அரசு மனநிறைவோடு மேற்கொள்ளும்.
அடுத்து அமையப்போவதும் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான்! அப்போது, இதைவிட பெரிய அளவில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை நடத்துவோம்! தமிழ்நாடு முழுவதும் மேலும் பல பிரமாண்ட நூலகங்களை அறிவுக் கோயில்களாக எழுப்புவோம்! அறிவுத்தீ வளர்ப்போம்! வெல்வோம் ஒன்றாக!
இவ்வாறு கூறினார்.