லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று பிற்பகல் நுழைந்த ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையுல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீண்டும் இணைந்த நிலையில், காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுகட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா கலந்துகொண்டார். அவர் ராகுலுடன் சிறிது நேரம் நடந்து சென்ற நிலையில், ராகுல் மற்றும் பிரியங்காவை வாழ்த்தினார்.
குமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் ஒற்றுமை யாத்திரை டெல்லிக்கு கடந்த 24ந்தேதி வந்தடைந்தது. இதையடுத்து, ஒருவாரம் விடுமுறை விடப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையானது, இன்று பிற்பகல், உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள பாக்பத்தில் நுழைந்து நடைபெற்று வருகிறது. இன்று இரவு மாவிகலா கிராமத்தில் முடிவடைகிறது.
இந்த நிலையில், உ,.பி.யில் இன்று பிற்பகல் நடைபெற்று வரும் யாத்திரையில், தேசிய மாநாட்டு தலைவர் பரூக் அப்துல்லா கலந்துகொண்டார். அதுபோல, பிரியங்கா காந்தியும் மீண்டும் கலந்துகொண்டார்.
முன்னதாக, அயோத்தியின் ராம ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா மஹந்த் சத்யேந்திர தாஸ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை வெற்றிபெற கடிதம் எழுதி வாழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.