சிட்னி: பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன், இந்திய வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட இந்திய அணியின் ஜெர்ஸி, தனக்கு பரிசளிக்கப்பட்டதற்காக நன்றி தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன்.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி, நாதன் லயனுக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். எனவே, அப்போட்டியில் இந்திய அணி வென்றாலும், லயனை கெளரவிக்கும் விதமாக ஒரு காரியத்தை செய்தார் தற்காலிக கேப்டனாக இருந்த அஜின்கியா ரஹானே.
இந்திய வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட, இந்திய டெஸ்ட் அணியின் ஜெர்ஸியை, நாதன் லயனுக்குப் பரிசாக அளித்தார் ரஹானே. இந்த விஷயம் அப்போதே பெரிய பாராட்டுக்களைப் பெற்றது.
தற்போது, அதற்காக தனது பதிவில் நன்றி கூறியுள்ள நாதன் லயன், “இந்திய வீரர்களின் கையெழுத்துடன் எனக்கு கொடுக்கப்பட்ட ஜெர்ஸி பரிசு மிகப் பெரியது. இந்திய வீரர்களின் உயர்ந்த குணத்தை அது காட்டுகிறது.
இந்தப் பரிசுக்காக, நான் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார் அவர்.