சென்ன‍ை: இந்திய அணி தற்போதைய நிலையில், அதிக தன்னம்பிக்கையுடன் காணப்படுவதால், அதை வெல்வது இங்கிலாந்து அணிக்கு எளிதல்ல என்றுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர்.

இந்தியாவில், இங்கிலாந்து அணி நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவில் மிகக் கடினமான சூழலில் வெற்றிவாக‍ை சூடிய இந்திய அணி, தற்போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள ஆண்டி பிளவர், “ஒவ்வொரு அணியும் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல நினைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி எதிர்கொண்ட சவால்கள் மிகவும் வித்தியாசமானவை.

அங்கே, கோப்பை வென்று தாய்நாடு திரும்பிய இந்திய அணியின் தன்னம்பிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே, இத்தகைய ஒரு சூழலில், இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.

அலெஸ்டர் குக், ஜோ ரூட் போன்றவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். சூழலுக்கேற்ப சரியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த டெஸ்ட் தொடர் எப்படி செல்லும் என்பதை கணிப்பது சிரமம்தான். ஆனாலும், தற்போதைய இங்கிலாந்து அணி அஞ்சத்தக்க வீரர்களைக் கொண்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை” என்றுள்ளார் அவர்.