சென்னை,

றுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற சசிகலாவின் கணவர் நடராஜன், விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு சிறுநீரகம்- கல்லீரல் பாதிப்படைந்திருந்தது.  அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அவருக்கு உறுப்பு  மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த தஞ்சாவூரை சேர்ந்த  கார்த்தி என்பவரை  சென்னை மருத்துவமனைக்கு  அழைத்து வந்து, அவரது உடல் உறுப்புகளை அகற்றி  நடராஜனுக்கு  பொருத்தப்பட்டது. கடந்த அக்.4ந்தேதி இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நடராஜன்  தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்தார். அவருக்கு புதியதாக இணைக்கப்பட்ட உறுப்புகளை அவரது உடல் ஏற்றுக்கொண்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக சுமார் 15 நாட்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு தற்போது சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது நடராஜன்  செயற்கை சுவாச கருவிகள் எதுவும் இன்றி அவரே இயற்கையாக சுவாசிக்கிறார் என்றும் அவர் உடல்நிலை வேகமாக முன்னேறி வருகிறது. எனவே  இன்னும் சில நாட்களில் அவர் மருத்துவ மனையில் இருந்த  டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனையின்  கல்லீரல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் இளங்குமரன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜனை அவரது மனைவி சசிகலா சிறையில் இருந்து பரோலில் வந்து பார்வையிட்டு சென்றார். அதுபோல வைகோ, திருமாவளவன் போன்றோர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வந்து விசாரித்து சென்றது குறிப்பிடத்தக்கது.