வாஷிங்டன்

நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து 4 விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து 4 விண்வெளி வீரர்களைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. இன்று  இந்த விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் விண்கலம் செலுத்தப்பட இருந்தது. கடைசி நேரத்தில் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டு நாளை காலை 3.27 மணிக்கு விண்கலம் செலுத்தப்படும் என நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்துள்ளன.

நாசா தனது அறிக்கையில் நாசாவிற்கான மைக்ரோ கிராவிட்டி ஆய்வகத்திற்குச் சுழற்சி முறை பணிக்காக அனுப்பப்படும் ஸ்பேஸ்எக்ஸின் 7வது குழுவினர், ஆகஸ்ட் 26 அதிகாலை 3:27 மணிக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த கூடுதல் நேரம் தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலம் ஆகியவை ஆரோக்கியமாக உள்ளன என்று நாசா கூறியிருக்கிறது.

நாளை விண்வெளிக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜாஸ்மின் மொக்பெலியின் தலைமையில் டென்மார்க்கின் ஆண்ட்ரியாஸ் மொஜென்சன், ஜப்பானின் சடோஷி புருகாவா மற்றும் ரஷ்யாவின் கான்ஸ்டான்டின் ஆகிய விண்வெளி வீரர்கள் செல்கின்றனர். இந்த வீரர்கள் ஆறு மாத காலம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.