வாஷிங்டன்

முழுவதும் புவியீர்ப்பு இல்லாத சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் நாசா முள்ளங்கி வளர்த்து சாதனை புரிந்துள்ளது.

நாசாவின் சர்வ தேச விண்வெளி ஆய்வு நிலையம் புவியீர்ப்பு வளையத்துக்கு மேலே அமைந்துள்ளதால் அங்குப்  புவியீர்ப்பு சக்தி கிடையாது.  மேலும் வெப்பம் இல்லாத இடமான அங்கு மனிதர்கள் கவச உடை இன்றி தங்க முடியாது.  இந்த இடத்தை மைக்ரோ கிராவிட்டி என அழைக்கபடுவது வழக்கமாகும்.

எதிர்காலத்தில் சந்திரன், செவ்வாய் ஆகிய இடங்களுக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.   அவர்களுக்கு ஃப்ரெஷ் ஆன உணவு அளிக்க வசதியாகக் காய்கறிகளை விண்வெளி நிலையத்தில் பயிரிட நாசா முடிவு செய்துள்ளது.  அதையொட்டி இங்கு சோதனை முறையில் முள்ளங்கி பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு செடிகள் வேர் விட அத்தியாவசியமான  புவியீர்ப்பு சக்தி இல்லை என்பதால் தலையணை போன்ற அமைப்பில் உரம் மற்றும் நீர் கிடைக்கும் வகையில் இச்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன.   மேலும் செடிக்கு வெப்பம் ஊட்ட சிவப்பு மற்றும் நீல ஒளி உமிழும் விளக்குகள் அமைக்கப்பட்டன.

இந்த செடிகள் வளர்வதை அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி கட்டுப்பாடு அறையில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்துள்ளனர்.   அவர்கள் இந்தச் செடிகள் வெற்றிகரமாக வளர்ந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.