நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் ஜாதிய வேறுபாடு காரணமாக  பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் போனில் நலம் விசாரித்தார்.  சபாநாயகர் அப்பாவு உள்பட தமிழ்நாடு  அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

நாங்குநேரி சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவனின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். காயமடைந்த மாணவர் சின்னதுரையின் தாயார் அம்பிகாவதியிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். தைரியமாக இருக்கும்படி மாணவரின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரி நேரில் சந்தித்து  நலம் விசாரித்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் வசித்து வருபவர் முனியாண்டி. இவர் கூலி வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி அம்பிகாபதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள்பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள். மகள் மற்றும் மகன் இருவரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் பயிலும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் பிளஸ் டூ மாணவனிற்கும் இடையே அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது நாளடைவில்,  ஜாதி மோதலாக மாறி உள்ளது. பின்னர், சில மாணவர்கள் சேர்ந்து,  நாங்குநேரியை சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவனை சிலர் தாக்கியுள்ளனர். அதனால் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என மறுத்துள்ளார்.

இதையடுத்த மாணவனின் தாயார், இதுதொடர்பாக  பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவனின் புகார் அளித்தார்.  அந்த புகாரின் பேரில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த பட்டியலின மாணவனை எதிர்த்தரப்பினர் வீடு புகுந்து அறிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுத்து சென்ற அவருடைய தங்கைக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அதில் படுகாயம் அடைந்த அண்ணன், தங்கை இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்ற பிறகே, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், நாங்குநேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து, பட்டியலின மாணவனை தாக்கிய மாணவர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் நாங்குநேரி பட்டியல் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதுயும் வழக்கப்பட்டது.