சென்னை:

நாங்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் தாக்கல் செய்திருந்த  வேட்புமனுவில்  குறிப்பிடப்பட்டிருந்த  சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

ரூபி மனோகரன் சொத்து மதிப்பு (காங்கிரஸ்):

நாங்குனேரி இடைத்தேர்தலில்  திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் சென்னையில் உள்ள பிரபல ரூபி பில்டர்ஸ் அதிபர் ரூபி  மனோகரன் போட்டியிடுகிறார்.

கட்டுமான தொழில் செய்து வரும் இவர், நகைகள், வியாபார முதலீடுகள் ஆகியவற்றை சேர்த்து 23 கோடியே 12 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 6 கோடியே 77 லட்சம் ரூபாய் கடன் உள்ளது என்றும் கணக்கு காட்டியிருக்கிறார்.

அவரது  மனைவி பெயரில் 22 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும், 6 கோடியே 22 லட்சம் ரூபாய் கடனும் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாராயணன் சொத்து மதிப்பு (அதிமு):

நாங்குனேரி இடைத்தேர்தலில்  அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக ரியல் எஸ்டேட் அதிபர் நாராயணன் போட்டியிடுகிறார்.

இவர்,  தனக்கு 1 கோடியே 29 லட்சம் மதிப்பிலான அசையும் அசையா சொத்துக்களும் 1 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் நிலுவையும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மனைவி பவளவல்லி பெயரில் 1 கோடியே 28 லட்சம் மதிப்பிலான சொத்து, 2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் வங்கி கடன் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் தமிழர் வேட்பாளர் ராஜநாராயணனுக்கு 22 லட்சம் மதிப்பில் சொத்துக்களும், அவரது மனைவி பெயரில் 8 லட்சம் மதிப்பில் நகைகள் மட்டும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு கடன் ஏதும் இல்லை என்றும் மனைவிக்கு 1 லட்சம் நகை கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.