சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து  ஓ.பி.எஸ். மற்றும்  வித்யாசாகர்ராவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மது ஒழிப்பு போராளி நந்தினி மனு அளித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது.   சென்னை எழிலகத்தில் செயல்படும் இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தின் முன்பு மதுரையைச் சேர்ந்த மது ஒழிப்பு போராளி, நந்தினி ஒரு மனு  அளித்துள்ளார். அந்த மனுவில்  அவர் தெரிவித்திருப்பதாவது:

“ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டிருந்த மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு எப்பொழுது விலக்கிக் கொள்ளப்பட்டது? இதற்கு பரிந்துரைத்தவர் யார்? இதற்கு உத்தரவிட்டது யார்? இவ்வாறு விலக்கிக் கொள்ளப்பட்டதன் பின்னணி என்ன? என்பன குறித்து தங்களது விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது இவர் வசமிருந்த அனைத்து துறைகளையும், பொறுப்புகளையும் அப்போதைய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றி பொறுப்பு ஆளுநராக இருந்த வித்தியாசாகரராவ் உத்தரவிட்டார்.

ஆளுநர் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் சந்தித்தது பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்துள்ளன. ஜெயலலிதாவின் ஒப்புதலோடு ஆளுநர் செயல்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே பொறுப்பு ஆளுநராக இருந்த வித்தியாசாகரராவையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் அவரது இறுதி சடங்குகள் வரை அப்போதைய மத்திய அமைச்சரான வெங்கையா நாயுடு உடன் இருந்தார். இவருக்கு ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக பல உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே இவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது இவரது சிகிச்சை தொடர்பான அனைத்து விபரங்களும் அவ்வப்போது உளவுதுறை அறிக்கைகள் மூலம் முதல்வர் பொறுப்புகளை கவனித்து வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கும். எனவே ஜெயலலிதா மரணம் தொடர்பான அனைத்து தகவல்களும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தெரியும். இவரை முழுமையாக விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும். எனவே இவரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதற்கு விசாரணை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் நந்தினி தெரிவித்துள்ளார்.

அவருடன் அவரது தந்தை ஆனந்தனும் வந்திருந்தார்.