
மதுவிலக்கு போராட்டத்தின் மூலம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. இவர் தனது தந்தை ஆனந்தனுடன் சேர்ந்து பலமுறை உண்ணாவிரதம், நடைபயணம் என்று தொடர்ந்து போராடி வருவபவர். முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்க முயன்றது உட்பட பல போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்.
தற்போது நந்தினி, சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதைவை எதிர்த்து ம.ந.கூட்டணியின் பொது வேட்பாளர் வசந்தி தேவியை ஆதரித்து பிரச்சாரம் செயது வருகிறார். அவருடன் தந்தை ஆனந்தனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நந்தினியிடம் பத்திரிகை டாட் காம் இதழுக்காக சில கேள்விகளை முன் வைத்தோம்..

வசந்தி தேவிக்காக பிரச்சாரம் செய்வது ஏன்?
கடந்த நான்காம் தேதியிலிருந்து நானும் என் அப்பாவும், வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து வசந்தி தேவிக்காக பிரச்சாரம செய்து வருகிறோம். “குடி, குடி” என்ற ஜெயலலிதாவுக்கா உங்கள் ஓட்டு..? படி படி என்று சொல்லி மாணவர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த வசந்தி தேவியைத் தேர்ந்தெடுங்கள்” என்று பிரச்சாரம் செய்து வருகிறோம்.
இதுதான் வசந்திதேவியை நாங்கள் ஆதரிக்க காரணம். தவிர, ஜெயலலிதா தோற்க வேண்டும்… மக்களை குடியின் பாதையில் வீழ்த்திய அவர் வெற்றி பெறவே கூடாது என்பதும் காரணம்.

உங்களது பிரச்சாரத்தால் ஜெயலலிதா தோற்றுவிடுவார் என்று நம்புகிறீர்களா?
எங்கள் பிரச்சாரத்தால் மட்டுமல்ல.. ஆர்.கே. நகர் மக்களே ஜெயலலிதாவின் மீது மிகுந்த வெறுப்பில்தான் இருக்கிறார்கள். மாநிலத்தின் மற்ற இடங்களில் தெருவுக்கு நாலைந்து வீடுகளில் குடியால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், இந்தத் தொகுதியில் வீட்டுக்கு வீடு பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் ஆகவே மக்கள் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். தவிர ஏற்கெனவே முதல்வராக இருந்தபோது தோல்வி அடைந்தவர்தானே அவர்?

சசி பெருமாள் மறைவை அரசியலாக்கியவர் வைகோ என்று குற்றம் சாட்டினீர்கள். அவரது கூட்டணியில் போட்டியிடும் வசந்தி தேவியை ஆதரிக்கிறீர்களே..
பொதுவாக மதுவிலக்கு பிரச்சினையில் எந்த கட்சியும் சரிவர நடந்துகொள்ளவில்லை. அப்படிப்பட்ட கட்சிகள் இருக்கின்றன என்பதற்காக வசந்திதேவி போன்ற நல்ல வேட்பாளரை விட்டு விட முடியுமா.. ஆகவேதான் அவருக்காக வாக்கு சேகரிக்கிறோம்.
தற்போதைய தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ஜெயலலிதாவும் அவரது கட்சியும் கண்டிப்பாக தோற்கும். தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும். தி.மு.க. நல்ல கட்சி என்று மக்கள் நம்பவில்லை என்றாலும் ஜெயலலிதாவின் அ.தி.மு.கவுக்கு மாற்றாக வேறு கட்சி இல்லாததால் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

மக்கள் நலக்கூட்டணியை மாற்று என்று அக் கட்சியினர் கூறுகிறார்கள்.. விஜயகாந்தை மாற்று முதல்வர் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்களே..
மக்கள் நலக்கூட்டணி உண்மையிலேயே நல்ல கட்சிகளைக் கொண்டதாக இருக்கலாம. இலாலாமலு்ம் இருக்கலாம். ஆனால் அதை அ.தி.மு.கவுக்கு மாற்றாக மக்கள் நினைக்கவில்லை. தி.மு.கவைத்தான் நினைக்கிறார்கள். ஆகவே மக்கள் நலக்கூட்டணி இத் தேர்தலில் வெற்றி பெறாது. தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும்.

ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தி.மு.க. சொல்வதை நம்புகிறீர்களா..
ஆமாம். அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் மதுவிலக்கை அமல் படுத்துவார்கள். இல்லாவிட்டால் மக்கள் கிளரந்தெழுவார்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
தி.மு.க. பிரமுகர்கள் நடத்தும் சாராய ஆலைகளை மூடவே அவர்கள் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடும்பத்தினர் பெயரில் சாராய ஆலை நடத்தும் டி.ஆர். பாலுதான் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அவர்களை நம்புகிறீர்களா?
திமுக வாக்கு கொடுத்துவிட்டது. மதுவுக்கு எதிரான மக்களின் போராட்டமும் அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆகவே அந்த பயத்திலாவது மதுவிலக்கை கொண்டுவருவார்கள். அப்படி இல்லை என்றால் இப்போது நடந்ததை விட கடுமையான போராட்டங்கள நடத்துவோம்.
Patrikai.com official YouTube Channel