சேலம்:

மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நாமக்கல் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தினசரி புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுவரை 24 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் உள்பட 30 குழந்தைகள்  விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள சிபிசிஐடி போலீசார், இது தொடர்பாக 9 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், குழந்தை விற்பனை தொடர்பாக சேலம் எஸ்.கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் நர்ஸ் உதவியாளர் சாந்தியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

நாமக்கல் குழந்தைகள் விற்பனை விவகாரம், விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதாவின் ஆடியோ வெளியானதால் வெளிச்சத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அமுதாவுடன், அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் மருத்துவமனை நர்ஸ் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர்கள் அருள்சாமி, லீலா உள்பட 8  பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து,  பெண் புரோக்கர்கள் பர்வீன் (35), நிஷா என்ற ஹசீனா(28)  கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், புரோக்கர்கள் பர்வீன், ஹசீனா, அருள்சாமி, டிரைவர் முருகேசனிடம்  நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது உறுதியானது. மேலும், சேலம் எஸ்.கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் நர்ஸ் உதவியாளர் சாந்தியும் இதில் சம்பந்தப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் நடத்திய விசாரணையில், குழந்தை விற்பனை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்படும் விசாரணையை தொடர்ந்து, மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.