நாமக்கல்: இரட்டை இலைக்கு ஓட்டு போடாவிட்டால் நல்ல சாவே வராது என்று பொதுமக்களுக்கு நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சாபம் விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று உள்ளன.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக , தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்நிலையில் நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.பி.பி. பாஸ்கர் பொதுமக்களுக்கு சாபம் விடுத்துள்ளார்.
பிரச்சார பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், நீங்க இரட்டை இலைக்கு ஓட்டு போடலன்னா சத்தியமா, நல்ல சாவே சாவமாட்டீங்க. இத்தனை திட்டங்களை செய்துள்ளோம்.
நன்றி கெட்ட மக்களாக இருக்காதீர்கள். நன்றி கெட்ட தொகுதியா நாமக்கல் தொகுதியை மாற்றி விடாதீர்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார். அதிமுக வேட்பாளரின் சர்ச்சை பேச்சு ஒரு பக்கம் இருக்க கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கழித்து இந்த தொகுதியில் திமுக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.