மதுரை: 1 முதல் 12ம்  வகுப்புவரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  டிஎன்பிஎஸ்சி 2019ம்  ஆண்டு ஜனவரி 1ம் தேதி துணை ஆட்சியர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கான தேர்வுக்கு அழைப்பு விடுத்தது.

அதில், தொலைநிலை கல்வியில் தமிழில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் முழுமையாக தமிழ்வழியில் படித்த எனக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. 1 முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துவிட்டு இடஒதுக்கீடு பெற தொலைநிலை கல்வியில் பயின்று  இட ஒதுக்கீட்டை பெறுகிறார்கள்.

இந்த இடஒதுக்கீட்டை முழுமையாக தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தர வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 1 முதல் 12ம்  வகுப்புவரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி, கல்லூரி அல்லது தொழில்துறை படிப்பு ஆகிய எல்லாவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவித்தார்.