கோவில் வழிபாட்டு உரிமை மறுப்பு காரணமாக தமிழகத்தில்  இரண்டு கிராம மக்கள் இஸ்லாம் மதம் மாற முடிவுசெய்துள்ளனர்.
dalit-tn-759
நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு கிராமத்திலும், கரூர் மாவட்டத்தில் உள்ள  நாகப்பள்ளி கிராமத்திலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் தீண்டாமையை பல வடிவங்களில்  அனுபவித்து வருகின்றனர்.
தாங்கள் இருக்கும் இந்து மதத்தில் தங்களுக்கு   கோவில்களில்  வழிபட உரிய   உரிமைகள் இல்லாததால்  இந்த முடிவினை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்- நாகப்பள்ளியில்   70 தலித் குடும்பங்கள் மற்றும் நாகை-பழங்கள்ளிமேட்டில் 180 தலித் குடும்பங்கள் இந்த முடிவினை எடுத்துள்ளனர்.
நாகை-பழங்கள்ளிமேட்டில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் ஐந்து நாள் திருவிழா நடைபெரும்.  ஐந்து நாளில் ஒருநாள் ஒடுக்கப்பட்ட மக்கள் வழிபட ஒதுக்க வேண்டுமென பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. ஆனால் மண்டகப்படி வைக்கும்  உரிமை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது.
தங்களை கோவிலுக்குள் நுழைய உயர்சாதிவெறிப்பிடித்த இந்துக்கள் அனுமதிப்பதில்லை என்பதால் இனியும் இந்துக்களாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே தங்களுக்கு மதிப்பு கிடைக்கக் கூடிய இஸ்லாமுக்குப் போகப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்து அமைப்புகளின் பிரநிதிகள் இந்த மக்களிடம் மதம்  மாற வேண்டாம், பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம்  எனக் கூறி  தலித் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
அங்குள்ள இளைஞர்கள்  உரிமைக்காக பல விதங்களிலும் போராடி  சோர்ந்து போய்விட்டனர். நாகை  மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமையை பெற்றுத் தர தவறிவிட்டதே இவர்கள் மதம்மாற முடிவெடுக்கக் காரணமாகும்.
மதமாற்றமே தங்களின் அடுத்த தலைமுறை தீண்டாமையில் இருந்து விடுபட உதவும் என்று இம்மக்கள் கருதுகின்றனர்.
இஸ்லாமுக்கு மாறுவதில் தீவிரமாக இருந்த  ஆறு பேர் ஏற்கனவே இஸ்லாத்தை தழுவினர். மீதமுள்ளவர்களை   கோபத்தில் மதம் மாறக் கூடாது, எனவே, குரானைப் படித்து விட்டு இம்மார்க்கத்தை தழுவும் முடிவினை எடுங்கள் என முஸ்லிம் அமைப்பினர்  ஆலோசனை கூறியுள்ளனர்.
கரூர் நாகப்பள்ளியின் நிலைமை இன்னும் மோசமானது. உயர் சாதியினர் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்றுதான் வெற்றிவேல் என்பவரின்  தந்தை இந்து அறநிலையத்துறையின் நிதியுதவியைப் பெற்று  2009ம் ஆண்டு
ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன்  கோவிலைக் கட்டினார். இந்தக் கோவிலை தலித் சமூகத்தினர் தான் நிர்வகித்து வந்தனர்.  ஆனால்  இலங்கையிலிருந்து திரும்பி வந்துள்ள சிலர் இக்கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களை விரட்டியடித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து மதமாறப் போவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
தமிழகத்தில் கடந்த 1981ம் ஆண்டு நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் 800 தலித் குடும்பங்கள் மொத்தமாக இஸ்லாமுக்கு மாறினர்.   அப்போது வாஜ்பாய் , நாட்டின் மிகப் பெரிய மடாதிபதிகள் பலரும் மீனாட்சிபுரத்துக்குப் படையெடுத்து வந்தும்  இதனைத் தடுக்க முடியவில்லை.
இப்போது நாகை மற்றும் கரூர் மாவட்ட கிராமங்கள் மீண்டும் அவ்வழியைப் பின்பற்றுகின்றன.
தமிழகத்தை ஆளும் அதிமுக  அரசின் கீழ்  பல்வேறு சாதி ஆணவக் கொலைகளும், சாதி  மோதல்களும் , தீண்டாமைக் கொடுமைகளும் நடந்தேறி வருகின்றன. ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுக்குமா ?