போபால்
நர்மதை யாத்திரை விவகாரத்தை ம பி. முதல்வர் மூடி மறைப்பதாக மடாதிபதிகளான நாகா சாதுக்கள் தெரிவித்துள்ள்னர்
நர்மதை நதிக்கரை சுத்திகரிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மத்தியப் பிரதேச அரசு நிகழ்த்தியது. அதில் கடும் ஊழல் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதற்கு மத்தியப் பிரதேச அரசு மறுப்பு தெரிவித்தது. அதை ஒட்டி மடாதிபதிகளான சில சாதுக்கள் நர்மதை யாத்திரை சென்று உண்மையைக் கண்டுபிடிக்கப் போவதாக தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேச அரசு சார்பாக முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அந்த 5 சாதுக்களுக்கும் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து வழங்கினார். இது மாநிலம் எங்கும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து 13 மடாதிபதிகளான நாகா சாதுக்கள் போராட்ட ஊர்வலம் ஒன்றை வைரஞானந்த் சாமி தலைமையில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இல்லத்துக்கு நடத்த முற்பட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது நாகா சாதுக்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். வைரஞானந்த சாமி அபோது பத்திரிகையாளர்களிடம், “கடந்த 12 வருடங்களாக இல்லாமல் இப்போது திடீரென சாதுக்களுக்கு அமைச்சருக்கு இணையான அந்தஸ்து வழங்கியது ஏன்? சிவராஜ் சிங் சௌகான் எதையோ மறைக்க இவ்வாறு செய்கிறார் என சந்தேகம் வருகிறது. அவர் தவறு செய்யவில்லை என்றால் ஏன் சாதுக்களுக்கு இவ்வாறான அந்தஸ்து அளித்துள்ளார்?
மரக்கன்றுகள் நடப்பட்டதாக சிவராஜ் சிங் தெரிவித்த நர்மதை நதிக்கரை பகுதிகளுக்கு நான் நேரில் சென்று பார்த்தேன். அங்கு மரக்கன்றுகள் ஒன்றும் தென்படவில்லை. இது குறித்து நாங்கள் மத்தியப் பிரதேச ஆளுநருக்கும் பிரதமருக்கும் மனுக்கள் அளித்துள்ளோம்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இது குறித்து இன்னும் 25 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை எனில் நாங்கள் முதல்வருக்கு எதிராக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய உள்ளோம். இது நாங்கள் முதல்வருக்கு அனுப்பும் எச்சரிக்கை” என கூறி உள்ளார்.