கவிதை எழுதுவதில் மிகுந்த நாட்டமும் புலமையும் கொண்டவர் நா.முத்துக்குமார். அவரது கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள் இங்கே…
வாழ்க்கை
கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
பார்க்காமலே அறிந்துக்கொள்கிறார்
ஸ்லத புராணம்
பெருமாள் கோயில் பிராகாரமும்
பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும்
ஆயிரங்கால் மண்டபத்தின்
அமானுஷ்ய இருட்டும்கூட
காலத்தில் கரையாமல்
அப்படியே இருக்கின்றன நண்பா!
தன் தம்பியுடன் வந்து
நம் பார்வைகளுடன் திரும்பும்
காயத்ரியின்
கால் தடங்களில் மட்டும்
சிமென்ட் பூசியிருக்கிறார்கள்!
உயில்
மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!
குட்டி புத்தரின் கோபம்
” இவர் பேரு புத்தர்
இன்னொரு பேரு ஆதவன்
அந்தப் பேரைத்தான்
உனக்கு வைத்திருக்கிறேன்!”
என்றேன் மகனிடம்.
கோபமாக சொன்னான்;
“”அவர் பேரு புத்தர்
நான்தான் ஆதவன்!’
நெஞ்சொடு கிளத்தல்
சுடலையேகி வேகும் வரை
சூத்திரம் இதுதான் சுற்றுப் பார்
உடலைவிட்டு வெளியேறி
உன்னை நீயே உற்றுப் பார்!
உள்ளும் புறமும்
அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்கின்றன!
நில் கவனி செல்
மாநகரத்துச் சாலைகளுக்கு
அவ்வப்போது உயிர் கொடுக்கிறது
தொட்டியில் பூத்த
ரோஜாச் செடிகளுடன்
வந்து போகும் மாட்டு வண்டி!
முதல் காதல்
காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை!
இட்லிப்புத்திரர்கள்
இட்லிகள் மென்மையானவை.
வெதுவெதுப்பானவை.
சைபர் சைபராய்
வட்டக்குழியில் வெந்தவை.
திடப்பொருளாய் தோன்றி
இளகிய நிலையில் திரவமாகி
வெப்பத்தால் இறுகியது
அதன் உருவம்.
மிகமுக்கியம்
இட்லிகள் கொள்கையற்றவை.
சாம்பாரில் மிதவையாகவும்,
சட்னியில் துவையலாகவும்,
ஏதுமற்றப் பொழுதுகளில்
எண்ணெய் மிதக்கிற
மிளகாய்த்தூளில் துணுக்கெனவும்
எதனுடனும் அமையும்
இட்லிகளின் கூட்டணி
கம்ப்யூட்டர் ‘சிப்ஸ்’ விற்கிற
அந்நிய நாடுகளில்
உள்ளூர் இட்லிகளுக்கு
அமோக வரவேற்பு
மேலும்
இட்லிகளை
அஃறினை என்று
அர்த்தப்படுத்த முடியாது
அவை
குட்டிப்போட்டுப் பாலூட்டும்
இனத்தைச் சார்ந்தவை.
கூர்வாள்
நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கு மூன்று காரணங்கள்.
ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்.
இரண்டு
அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.
மூன்று
உங்களிடம் அதைப்
படிக்கக் கொடுக்கிறேன்..