புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரம் குறித்த தனது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்கும் மனநிலையில் இல்லை என்பதால், தான் சீனாவுக்கு செல்ல வேண்டியிருக்கலாம் என தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரும், சர்ச்சை அரசியல்வாதியுமான சுப்ரமணிய சாமி.

தனது இந்த பூடகமான கருத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் சாமி.

அவர் கூறியுள்ளதாவது, “பொருளாதாரம் தொடர்பான எனது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை செவிமடுக்க தயாராக இல்லை நரேந்திர மோடி. எனவே, நான் சீனாவுக்கு செல்ல வேண்டியிருக்கலாம். அந்நாட்டின் புகழ்பெற்ற சிங்குவா பல்கலைக்கழகம், வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஒரு கருத்தரங்கில் உரையாற்ற அழைத்துள்ளது.

“சீனாவின் பொருளாதார மேம்பாடு: கடந்த 70 ஆண்டுகளில் மதிப்பாய்வு” என்ற தலைப்பில் பல அறிஞர் பெருமக்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கில் உரையாற்ற அழைத்துள்ளது அப்பல்கலைக்கழகம்” என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த டிவீட்டுக்கு பலவிதமான பதில்கள் வந்துள்ளன. சிலர், இவரை நாட்டை விட்டு செல்லக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர். சிலரோ, அதற்கான காரணம் என்ன? என்று வினவியுள்ளனர்.