சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மரகத மயில் சிலை மாயமான வழக்கின் விசாரணைக்கு, சிலை தடுப்பு பிரிவு நீதி மன்றத்தில்  மேலும் அவகாசம் கோரி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 9 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த தொன்மை வாய்ந்த மயில் சிலை மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான நீதிமன்ற விசாரணையில்,  மயில் சிலை மாயமானது குறித்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை மற்றும் அறநிலையத் துறையின் உண்மை கண்டறியும் குழு தங்களது விசாரணையை 6வார காலத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் அந்த மயில் சிலையானது அங்குள்ள தெப்பக்குளத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக குளத்திற்குள் இறங்கி தேடி வந்தனர். ஆனால், மாயமான மயில் சிலை இதுவரை சிக்கவில்லை.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை தடுப்பு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மயில் சிலை மாயமானது  தொடர்பாக 29 பேரிடம் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை நடத்திஉள்ளதாகவும், இன்னும் 9 பேரிடம் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால், மேலும் கால அவகாசம் தேவை என கோரிக்கை வைத்தார்.

இதை பதிவுசெய்த நீதிபதிகள், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை  ஜூன் 28ந்தேதிக்கு  தள்ளிவைத்தனர்.