நய்பிய்டா:

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மூலம் அமைதிக்கான நோபல் பரிசு இறந்துவிட்டது என்று ஈரான் தலைவர் அயோதொல்லா அலி காமினி தெரிவித்துள்ளார்.

தெஹ்ரானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மேலும், அவர் கூறுகையில், ‘‘ கொடூரமான ஒரு அரசாங்கம், கொடூரமான ஒரு பெண் தலைமையில் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது. அந்த பெண்ணுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் வீடுகளை அழித்து அவர்களை வெளியேற்றும் செயல் நடந்து வருகிறது.

சர்வதேச சமுதாயம் மியான்மர் ராணுவத்தின் பின்னால் நிற்கிறது. மியான்மரில் இந்த வன்முறையை கட்டுப்படுத்தாத ஆங் சான் சுகியில் தோல்விக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. நாட்டின் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீதான இந்த தாக்குதலை கண்டிக்காத ஆங் சாங் சுகி தற்போது சிறந்த தலைவராக போற்றப்படுகிறார்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில்,‘‘ இச்சம்பவத்தை பலரும் கண்டிக்கிறார்கள். அறிக்கை விடுகிறார்கள். ஆனால் எந்தவித பலனும் இல்லை. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அமைதிக்கான நோபல் பரிசு இறந்துவிட்டதற்கு உதாரணமாகும். இது பவுத்த மதத்தினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்னை மட்டும் கிடையாது. இதன் பின்னால் சில மதவாத சக்திகள் இருந்தாலும், இதை அரசு தான் செய்கிறது.
இது ஒரு அரசியல் பிரச்னை. இதற்கு முஸ்லிம் அரசாங்கங்கள் தான் பிரதிபலிக்க வேண்டும். இதற்காக அவர்கள் படைகளை அனுப்ப வேண்டும் என்பது கிடையாது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான அழுத்தங்களை கொடுக்க வேண்டும். சமாதானத்திற்கான இஸ்லாமிய நல்லுறவு அமைப்பு இதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

ஈரானியர்கள் சார்பில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட உதவி பொருட்களை விநியோகம் செய்ய மியான்மர் அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. ஐ.நா தகவலின்படி 3 லட்சத்து 70 ஆயிரம் முஸ்லிம்கள் பவுத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ராணுவம் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. இச்சம்பத்தை இன அழிப்புக்கான ஒரு உதாரணம் என்று ஐ.நா மனித உரிமை ஆணையர் சயீத் ரா அத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.