டில்லி:

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை மற்றும் ரோஹின்யா அகதிகளை கையாண்ட விதத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் இந்தியாவை விமர்சனம் செய்துள்ளார்.

ஜெனீவாவில் நடந்த 36வது மனித உரிமை குழு கூட்டத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹூசைன் பேசுகையில், ‘‘உரிமைக்காக போராடுபவர்கள் இந்தியாவில் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தவறிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் நிலவும் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க மறுக்கின்றன.

மதம் மற்றும் இதர சிறுபான்மையினர் மீதான வெறுப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் மீதான வன்முறை, தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் போன்றவர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்துள்ளது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘இது போன்ற சம்பவங்கள் பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு காரணமாக நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடுவோர் மற்றும் அடிப்படை வசதிகளுக்காக போராடும் மக்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்களும், கிரிமினல் நடவடிக்கைகளும் தொடர்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதே சமயம் மியான்மரில் இருந்து அகதிகளாக வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்த கருத்துக்கள் வருத்தமளிக்கிறது. அங்கு கலவரம் நடந்து வரும் சமயத்தில் அவர்களை நாடு கடத்துவதற்கு நடந்து வரும் முயற்சிகள் ஏற்கதகுந்ததல்ல. அகதிகளுக்கு இடமளிப்பது தொடர்பாக சர்வதேச சட்டப்படியும், மனிதாபிமான அடிப்படையில் தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

இது வரை 40 ஆயிரம் ரோஹிங்கியாஸ் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.