பிரியங்காவும் தானும், ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஐந்து நாட்கள் பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
“எனது தந்தை இறக்க போகிறார் என்பதும் எனது பாட்டி இறக்க போகிறார் என்பதும் எங்களுக்கு தெரியும். அரசியலில் எதற்காகவாவது போராடினால் மரணம் நிச்சயம் என்பது எனக்கு தெரியும்.
எனக்கு 14 வயதாக இருக்கும்போது எனது பாட்டி இந்திரா படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலையாளிகளுடன் நான் பேட்மிண்டன் விளையாடி இருக்கிறேன்.
எனது தந்தை மரணத்துக்கு பிறகு நான் வாழும் சூழலே மாறிவிட்டது. 24 மணி நேரமும் 15 பாதுகாவலர்களுடனே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
எனது தந்தை மனித வெடிக்குண்டு மூலம் கொன்றதை எண்ணி நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனை அடைந்தோம். பல வருடங்களாக, கொலையாளிகள் மீது கோபத்தில் இருந்தோம்.
ஆனால் தற்போது எப்படியோ கொலையாளிகளை முழுமையாக மன்னித்து விட்டோம். எந்தவொரு விஷயமும் அவரவர் வாழ்க்கையில் நடைபெறும் போதுதான் அதை உணரமுடியும்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணத்தை டிவியில் பார்த்தபோது இரு விஷயங்களை நினைத்தேன். ஒன்று இலங்கை ராணுவத்தினர் ஏன் இத்தனை கொடூரமாக நடந்துள்ளனர் என்று தோன்றியது. அடுத்தபடியாக, அவருக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வேதனை அடைந்தேன். வன்முறையை தாண்டி அவர் ஒரு மனிதர், அவருக்கும் குடும்பம் உள்ளது. குழந்தைகள் அவருக்காக அழுவர். நான் இதுபோன்ற வலியை அனுபவித்திருக்கிறேன்” என்று ராகுல் தெரிவித்தார்.